1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 30 செப்டம்பர் 2014 (11:34 IST)

ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு (திங்கட்கிழமைக்கு) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் சார்பில், தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், ஜாமின் கோரியும் திங்கட்கிழமை அன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
கர்நாடக உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக் கால நீதிபதி ரத்தின கலா முன்னிலையில் மனு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பவானி சிங் கால அவகாசம் கேட்டார். அதாவது, இந்த வழக்கில் ஆஜராவது குறித்து கர்நாடக அரசு இன்னும் அறிவிப்பாணை வெளியிடவில்லை. கர்நாடக அரசின் அறிவிப்பாணை வரும் வரை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறினார்.
 
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.