வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 27 அக்டோபர் 2017 (12:17 IST)

ஜெ.வின் கை ரேகை வழக்கு இன்று விசாரணை : சிக்கலில் ராஜேஸ் லக்கானி?

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரின் மனுவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கை ரேகையை ஏற்றுக்கொண்ட விவகாரம் தேர்தல் கமிஷனுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கடந்த வரும் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் தோல்வியடைந்தார். அந்நிலையில், தேர்தல் ஆணைய படிவத்தில், ஏ.கே.போஸிற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கோரி ஜெ.வின் இடது கை பெருவிரலில் கை ரேகை வைக்கப்பட்டிருந்தது. 
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சுயநினைவோடுதான் அதில் கைரேகை வைத்தாரா என்பதில் சந்தேகம் எழுப்பிய சரவணன், ஏ.கே.போஸின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எனவே, இதுகுறித்து தேர்தல் ஆணைய செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 
 
அதன் விளைவாக, கடந்த 13ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய செயலாளர் வில்ஃபிரட் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அளித்த ஒப்புதலின் பேரில் ஜெ.வின் கைரேகை ஏற்கப்பட்டது. அவரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது. ஆனால், கைரேகை படிவத்தில் ஜெ.வின் உடல் நிலை குறித்த அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. நம்பிக்கையின் பேரிலேயே அதை ஏற்றுக்கொண்டோம் என அவில்ஃபிரட் விளக்கம் அளித்தார். 


 

 
அதன் மூலம் ஜெ.வின் கை ரேகை விவகாரத்தில் ஆவண, ஆதாரங்களோடு தேர்தல் ஆணையம் அணுகவில்லை என்பது நிரூபணம் ஆனது.
 
இது ஒருபுறம் இருக்க, மாற்றத்திற்கான இந்தியா என்கிற அமைப்பின் இயக்குனர் பாடம் நாராயணன் மற்றும் சமூக ஆர்வலர் கொண்டல் ராவ் ஆகியோர் ஜெ.வின் கை ரேகை விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.  எனவே, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு, தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இது தமிழக தேர்தல் ஆணையத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. இதில், ஜெ.வின் கை ரேகை பெற்ற மருத்துவர் பாலாஜி இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.