வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 19 நவம்பர் 2016 (18:33 IST)

முதல்வர் ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றம் - அப்பல்லோ அப்டேட்

உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து இன்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 57 நாட்களாக உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். லண்டன், எயிம்ஸ், அப்பல்லோ மருத்துவர்களின் கூட்டு முயற்சியால் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார். 
 
செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்த முதல்வர் ஜெயலலிதா தற்போது இயல்பான முறையிலேயே சுவாசித்து வருவதாகவும் வெறும் 15 நிமிடம் மட்டுமே செயற்கை சுவாசம் எடுத்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விட்டதாகவும், அவர் விரும்பும் நேரத்தில் வீட்டுக்கு செல்லலாம் என அப்பல்லோ நிர்வாகம் கூறியது. 
 
இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை 5 முதல் 7 மணிக்குள் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. ஆனால் அவர் இன்று மாலையே வீடு திரும்புவார் என்ற  தகவலும் கூறப்பட்டது. 
 
ஆனால், அவர் இன்று மாலை 6 மணி அளவில் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். முதல்வர் தற்போது 2 வது தளத்தில் சிகிச்சை எடுத்து வருகிறார். எனவே, தற்போது, அதே தளத்தில் உள்ள சாதாரண வார்டுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.
 
முதல்வருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் அப்பல்லோ நிர்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருப்பது, அப்பல்லோ வாசலில் இருக்கும் அதிமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், நவம்பர் மாத கடைசி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில்,முதல்வர் ஜெயலலிதா வீடு திரும்ப வாய்ப்பிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.