1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (19:34 IST)

ஜெயலலிதா உட்பட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. 
 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக இவர்கள் மீது 1997 இல் புகார் எழுந்ததையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையை 1998 இல் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்தது. 
 
அதன்பின்னர் நீண்ட காலமாக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் அரசு மற்றும் எதிர்தரப்பு வக்கீல்களின் இறுதி வாதம் நிறைவடைந்துவிட்டது. அதைத்தொடர்ந்து மேலும் சில தகவல்களை எடுத்து வைத்து வாதிட சில மணி நேரம் அவகாசம் வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வக்கீல் குமார் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக்கொண்ட தனி நீதிமன்ற நீதிபதி நேற்று ஜெயலலிதா தரப்பு வக்கீல் குமார் வாதிட அனுமதி அளித்து இருந்தார்.
 
நேற்று நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா முன்னிலையில் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெயலலிதா சார்பில் வழக்கமாக ஆஜராகும் வக்கீல் குமாருக்கு பதிலாக வேறு ஒரு வக்கீல் ஆஜரானார். சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான மனு கர்நாடக நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் மூத்த வக்கீல் அங்கு சென்று விட்டார் என்றும், அதனால் வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறும் கோரினார்.
 
இதை ஏற்க மறுத்த நீதிபதி, நாளைக்குள் (அதாவது இன்று) ஆஜராகி இறுதி வாதத்தை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் இறுதி வாதம் முடிந்துவிட்டதாக கருதி தீர்ப்பை ஒத்தி வைப்பேன் என்று ஜெயலலிதா தரப்பு வக்கீலுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார். அதேபோல் அரசு தரப்பும் எழுத்துபூர்வமான இறுதி வாதத்தை முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார். அதன்படி இன்றுடன் இறுதி வாதங்கள் நிறைவு பெற்றன. 
 
இதையடுத்து செப்டம்பர் 20 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். எனவே, 20 ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.