1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 29 ஜூலை 2015 (18:30 IST)

அப்துல் கலாமின் உடல் அடக்கத்துக்கு அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது: முதல்வர் தகவல்

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடல் அடக்கத்துக்கு ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 
 
இதுகுறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவின் 11 ஆவது குடியரசுத் தலைவரும், விஞ்ஞானிகள், இளைஞர்கள், பள்ளிச் சிறார்கள், சாதாரண குடிமக்கள் என அனைவராலும் போற்றப்பட்டவரும், அனைவரது நெஞ்சில் நிறைந்தவரும், தமிழகத்தின் தலைசிறந்த மைந்தருமான ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மறைவினால் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
 
ராமேசுவரத்தில் மிகவும் பின்தங்கிய ஏழை குடும்பத்தில் பிறந்து, உன்னத நிலையை அடைந்தவர் கலாம். எதையும் விஞ்ஞானப் பார்வையுடன் அணுகிய கலாம் இளைஞர்கள் வாழ்வில் ஏற்றம் பெற உந்து சக்தியாக விளங்கினார்.
 
ஏவுகணை உருவாக்கம், அணுசக்தித் திட்டங்கள் ஆகியவற்றில் அவருக்கு மிகுந்த பங்களிப்பு இருந்த போதிலும், போலியோ பாதித்தவர்களுக்கான எடை குறைந்த ஊன்றுகோல், இதய நோயாளிகளுக்கான ஸ்டென்ட் கருவி ஆகியவற்றை உருவாக்கியதில் மனநிறைவு கண்டவர் அப்துல் கலாம்.
 
அரசு நிலம் தேர்வு: நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்ற அவரது வார்த்தைகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் அப்துல் கலாம்.
 
அவரது உடல் நல்லடக்கம், அவரது சொந்த ஊரான ராமேசுவரத்தில் வியாழக்கிழமை (ஜூலை 30) நடைபெறவுள்ளது. அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க எனது உத்தரவின் பேரில், இதற்கென அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.