தினகரன், சசிகலா முகத்தில் கரியை பூசிய ஜெயக்குமார்!

தினகரன், சசிகலா முகத்தில் கரியை பூசிய ஜெயக்குமார்!


Caston| Last Modified புதன், 2 ஆகஸ்ட் 2017 (14:50 IST)
அதிமுகவில் அமைச்சர்களுக்கும் தினகரன் தரப்புக்கு இடையே நிலவி வரும் யுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது வெடிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் தினகரன் மற்றும் சசிகலா எதிர்ப்பு நிலையில் மிக தீவிரமாக உள்ளார்.

 
 
அமைச்சர்களால் அதிமுகவில் இருந்து தினகரன் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் நுழைய உள்ளார். இதற்காக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் அவர் தகவல் அனுப்பியுள்ளார்.
 
இந்நிலையில் தினகரனை கட்சி அலுவலகத்தில் நுழைய விடாமல் தடுக்க எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
இதில் ஓபிஎஸ் அணியை இணைத்து தினகரன், சசிகலா தரப்பை அடியோடு ஒழிக்க திட்டமிட்டதாக தகவல்கள் வருகின்றன. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார் மிக உக்கிரமாக இருக்கிறார். ஊடகங்களில் பேசும் போது தினகரன் தரப்புக்கு எதிராக பேசும் மிக முக்கிய நபர் ஜெயக்குமார் தான்.
 
இதனால் தினகரன் ஆதரவாளர்களுக்கு ஜெயக்குமார் மீது ஆரம்பத்தில் இருந்து கோபம் இருந்து வருகிறது. இதனை அவர்கள் பலமுறை தங்கள் பேட்டியின் போது வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்நிலையில் தினகரன் அணியை சேர்ந்த வெற்றிவேல் எம்எல்ஏ இன்று வெளியிட்ட வீடியோ ஒன்றில் தினகரனை, ஜெயகுமார் விமர்சித்தால்  கட்சி மற்றும் அமைச்சர் பதவியை அவர் இழக்க நேரிடும் என எச்சரித்திருந்தார்.
 
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமியை தினகரனும் சசிகலாவும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கவில்லை. அனைத்து எம்எல்ஏக்களும் ஒன்று சேர்ந்துதான் அவரை முதல்வராகத் தேர்ந்தெடுத்தோம். வெற்றிவேல் காங்கிரஸ் கட்சியிலிருந்து இங்கு வந்து கோஷ்டி பூசலை உருவாக்குகிறார் என கூறியுள்ளார்.
 
தினகரன், சசிகலா அணியினர் அடிக்கடி இந்த ஆட்சியை காப்பாற்றியது சசிகலா தான் என கூறுவர். இந்நிலையில் சசிகலாவும், தினகரனும் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்ந்தெடுக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது அவர்கள் முகத்தில் கரியை பூசிய பதில் போல் உள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :