1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 16 மே 2020 (13:12 IST)

திமுகவினர் முன் உதாரணமாக மதுக்கடைகளை மூட வேண்டும் – செக் வைத்த ஜெயக்குமார்!

தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுகவினர் அவர்கள் நடத்தும் மதுக்கடைகளை மூட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழக அரசின் மேல்முறையீட்டின் காரணமாக உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதால், இன்று முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மதுக்கடைகளில் கிழமை வாரியாக டோக்கன்கள் வழங்கப்பட்டும் வருகின்றன. இந்நிலையில் மதுக்கடைகளை அரசு மூட வேண்டும் என்று திமுக, மநீம உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மதுக்கடைகள் திறக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து வருகிறார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் ”தமிழகத்தில் உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. அதற்கு கால அவகாசம் தேவை. திமுகவினர் வேண்டுமானால் முன்னுதாரணமாக திமுக நிர்வாகிகள் நடத்தும் மதுக்கடைகளை மூடட்டும்” என கிண்டலாக கூறியுள்ளார்.

திமுகவினர் ஒருபக்கம் மதுக்கடைகள் திறப்பதை எதிர்த்துக் கொண்டே மற்றொரு பக்கம் மதுக்கடைகளை திறந்து வைத்துள்ளதாக அதிமுகவினர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.