1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2017 (10:55 IST)

சசிகலாவுக்காக ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றியமைக்கப்பட்டதா?

சசிகலாவுக்காக ஜல்லிக்கட்டு போட்டி தேதி மாற்றியமைக்கப்பட்டதா?

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் புரட்சி வெடித்தது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து பலரும் தங்களால் தான் ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெறுகிறது என கூறி வருகின்றனர். உண்மையான வெற்றியாளர்கள் மக்கள் என்பதை மறந்து.


 
 
ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியவுடன் ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் முறையே பிப்ரவரி 1 மற்றும் 2-ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது. ஆனால் திடீரென அந்த தேதி மாற்றியமைக்கப்பட்டது பிப்ரவரி 9, 10 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தொடங்கி வைக்க வேண்டும் என அந்த கிராமத்தை சேர்ந்த தலைவர்கள் நேரில் சென்று கோரிக்கை விடுத்தனர்.
 
அலங்காநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஜல்லிக்கட்டு விழா தலைவர் சுந்தர்ராஜன், செயலாளர் சுந்தராகவன், வாடிப்பட்டி தாலுக்கா மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு விழாத்தலைவர் செல்லத்துரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா தலைவர் கண்ணன், ராமசாமி, ஆகியோர் தனித்தனியே நேற்று அதிமுக பொது செயலாளர் சசிகலாவை சந்தித்தனர்.
 
இவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்ததற்காக சசிகலாவிற்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை சசிகலா தலைமையேற்று தொடங்கி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
 
இந்நிலையில் திட்டமிட்டபடி நடக்க இருந்த ஜல்லிக்கட்டு தேதி திடீரென மாற்றியமைக்கப்பட்டு, ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடந்த போது எந்த முயற்சியும் எடுக்கவில்லை என விமர்சிக்கப்பட்ட சசிகலாவுக்கு பாராட்டும் அவர் வந்து தொடங்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படுவதால் இது சசிகலாவுக்காக மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம் என ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மத்தியில் பேசப்படுகிறது.