1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (19:48 IST)

ஓபிஎஸுக்கு இது அழகல்ல: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சாடல்!

ஓபிஎஸுக்கு இது அழகல்ல: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சாடல்!

அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து நேற்று இரவு அதிமுக அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர். முன்னதாக இரு அணிகளும் இணைவது குறித்து நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த ஓபிஎஸ் கூறியதை அமைச்சர்கள் வரவேற்றனர்.


 
 
இதனையடுத்து இன்று பேச்சுவார்த்தை நடத்த அதிமுக அம்மா அணி சார்பில் அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தேனியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என தான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றார்.
 
பேசுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை, ஆனால் இரு அணிகளும் இணைவதற்கு நிபந்தனை உண்டு என அவற்றை குறிப்பிட்டார். அதில் முக்கியமாக சசிகலா குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து விலக வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி உண்மையை நாட்டு மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
 
ஓபிஎஸ் திடீரென இந்த பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக பேசியது அதிமுக அமைச்சர்கள் சிலரை எரிச்சலூட்டியுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸின் இந்த கருத்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
 
சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இருக்க கூடாது என ஓபிஎஸ் கூறுவது அழகல்ல. பேச்சுவார்த்தைக்கு ஆர்வமாக உள்ளாரா என்பதை ஓபிஎஸ் தான் கூற வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகத்தை எழுப்புவது அசிங்கமான முயற்சி என கடுமையாக சாடியுள்ளார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.