வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2015 (04:02 IST)

ராமநாதபுரத்தில் இப்தார் நோன்பு: தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார்

புனிதமும், கண்ணியமும் மிக்க சிறப்பு வாய்ந்த ரமலான் மாதத்தில், தேமுதிகவின் சார்பில், ராமநாதபுரத்தில் நடைபெற உள்ள இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார்.


 

இது குறித்து தேமுதிக. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:–
 
புனித ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம் ஆகும். நன்மைகள் அதிகம் செய்யும் மாதம் ஆகும். சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் மாதம் என்று இஸ்லாமியர்களால் பெரிதும் போற்றப்படும் மாதம்.
 
புனிதமும், கண்ணியமும் மிக்க சிறப்பு வாய்ந்த ரமலான் மாதத்தில்தான் இஸ்லாமியர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித நோன்பினை மேற்கொள்கின்றனர்.
 
இந்த தருணத்தில், வகுப்பு ஒற்றுமையை பேணுகின்ற வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேமுதிகவின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 
அதே போல, இந்த வருடமும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ராமநாதபுரத்தில் உள்ள ஏ.பி.சி. மைதீன் மகாலில் 12ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
 
எனவே, இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் திரளாக வருகை தந்து, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.