1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 11 ஜனவரி 2017 (21:16 IST)

ஜல்லிக்கட்டை எதிர்க்கும் “பீட்டா” அமைப்புக்கு அதிமுக அரசு உதவுகிறதா? - ஸ்டாலின் சந்தேகம்

“பீட்டா” அமைப்புக்கு உதவும் நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ என்ற நியாயமான கேள்வி இன்றைக்கு வந்திருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு என்ன நெருக்கடியோ தெரியவில்லை. “வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ” என்று ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒரு அறிக்கையை இன்று வெளியிட்டிருக்கிறார். அதுவும் ஜனவரி 3ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தலைமையேற்று நான் அலங்காநல்லூரில் ஆற்றிய உரைக்கு 8 நாட்கள் கழித்து பதிலறிக்கை கொடுத்திருக்கிறார்.

ஆனாலும் கூட முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவருக்கு ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பான கோப்புகள் எல்லாம் கிடைத்திருக்கும் என்பதால் அவருக்கு இது குறித்த விவரங்கள் முழுமையாக தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில் அந்த அறிக்கையைப் படித்தேன். ஆனால் படித்த பிறகு முதலமைச்சர் ஏற்றுக்கொண்ட புதிய பொதுச் செயலாளர் போல் இவருக்கும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முழு உண்மைகள் தெரியவில்லையே என்று வேதனைப்படுகிறேன்.

ஜல்லிக்கட்டு வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்ற நேரத்தில் திமுகவின் அழுத்தம் காரணமாக அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் “11.7.2011 அன்று வெளியிட்ட அறிவிக்கையிலிருந்து காளைகளை நீக்குவதற்கு தயார்” என்று மத்திய சுற்றுப்புறச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அபிடவிட்டே தாக்கல் செய்தது.

அதை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மறந்து விட்டு இப்போது திமுகவை குறை கூறி அறிக்கை விடுகிறார். அந்த அபிடவிட்டை சாதகமாக்கிக் கொண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு முழு தடை வராமல் தடுத்து இருக்க வேண்டிய அதிமுக அரசு அப்போதும் உச்சநீதிமன்றத்தில் கோட்டை விட்டது.

ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உரிய வாய்ப்புகள் கழக அரசு கொண்டு வந்த சட்டம் மூலமும், உச்சநீதிமன்றமே கொடுத்த அனுமதி மூலமும் இருந்தது என்றாலும் அதை தமிழர்களின் வீர விளையாட்டு தானே என்று அலட்சியத்தில் பொறுப்பற்ற முறையில் உச்சநீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டு ஜல்லிக்கட்டு தடை வருவதற்கு முழு முதல் காரணமாக இருந்தது அதிமுக அரசுதான்!

இன்று வரை ஜல்லிக்கட்டை நடத்த முடியாமல் இருக்கும் அதிமுக அரசு, “ஜல்லிக்கட்டை நடத்த விடமாட்டோம்” என்று அநியாயமாக வாதிட்டுக் கொண்டிருக்கும் “பீட்டா” அமைப்புக்கு உதவும் நோக்கில் தான் இப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ என்ற நியாயமான கேள்வி எனக்கு மட்டுல்ல - இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லட்சோபலட்சம் இளைஞர்களுக்கும் இன்றைக்கு வந்திருக்கிறது!

உச்சநீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் மார்கண்டேய கட்ஜு “ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும்” என்று தமிழக இளைஞர்கள் மீதான ஆர்வத்தில் சொன்ன கருத்தைக் கூட கொச்சைப்படுத்தி அறிக்கைவிடும் அளவிற்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன நெருக்கடி? எந்த மாதிரியான தர்மசங்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறார்? “மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி” என்பது போன்ற இடியாப்பச் சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறாரா என்ற மர்மம் புரியவில்லை.

முதலமைச்சரின் அறிக்கை முழுவதுமே “பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கு விலை என்ன” என்பது போல் இருக்கிறதே தவிர, ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த வேண்டும் என்ற உணர்வு அதில் எங்கும் இல்லை. குறிப்பாக தன்னை அமைச்சர்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதற்காக என்னை முன்னிறுத்தி ஒரு அறிக்கை விட்டு தன்னை முன்னிறுத்திக் கொள்ள முதலமைச்சர் விரும்பினால் அதை தாராளமாக செய்து கொள்ளுங்கள். எனக்கு கவலையில்லை.

ஆனால் லட்சோப லட்சம் தமிழ் இளைஞர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றி உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு பீட்டா அமைப்புக்கு வலு சேர்க்காதீர்கள். அதை விட இன்றைக்கு ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும் என்று தமிழகமெங்கும் போராடிய இளைஞர்கள் மீது காவல்துறையை வைத்து தடியடி நடத்தியிருக்கிறீர்களே! இந்த நடவடிக்கை “பீட்டா” அமைப்பின் தூண்டுதலினால் எடுக்கப்பட்ட நடவடிக்கையா?

ஜல்லிக்கட்டு வேண்டும் என்று கோரிக்கை வைத்து குரல் கொடுப்பதற்கு கூட தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் உரிமை இல்லையா? மாணவர்களின் மீதான தடியடிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், லாவணி பாடுவதை நிறுத்திவிட்டு வருகின்ற தை பொங்கல் தினத்திலாவது ஜல்லிக்கட்டு நடத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுங்கள் என்று முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.