1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 2 அக்டோபர் 2015 (13:48 IST)

பல வருடங்களாக வரி கட்டாத திரைத்துறையினர் : விஜய் 5 வருடமா?

கடந்த ஐந்து வருடங்களாக நடிகர் விஜய் வரி கட்டாமல் ஏய்ப்பு செய்திருக்கிறார் என்று  வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.


 

 
நடிகர் விஜய் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் புலி. இந்தப் படத்திற்கான வரியை அந்த படக்குழுவினர் செலுத்தவில்லை என்றும், அந்தப் படத்தில் நிறைய முறைகேடான பணப்பறிமாற்றம் இருந்ததாகவும் வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்தது. இதைத் தொடந்து, கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள், நடிகர் விஜய்,இயக்குனர் சிம்புதேவன் உட்பட பலரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.
 
மேலும், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோரது வீட்டிலும் சோதனை நடந்தது. மொத்தம் பத்து பேரின் வீடு வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில், புலி படக்குழுவினர் 25 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
கடந்த 2 நாட்களாக சென்னை, மதுரை உட்பட மொத்தம் 35 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.   இதில் புலி பட குழுவினர் வீடுகளில் இருந்து மொத்தமாக 2 கோடி ரூபாய் பணமும் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. 
 
மேலும், அவர்களிடமிருந்து சில ஆவணங்களையும் அதிகரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட பைனான்சியர்கள் 6 வருடங்களாக சரியாக வரி கட்டவில்லை என்றும், நடிககள் நயன்தாராவும், சமந்தாவும் கடந்த 2 ஆண்டுகளாக வரி கட்டாமல் ஏய்ப்பு செய்துள்ளனர் என வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதேபோல இவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பத்திரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் 10 பேரும் 
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

கணக்கில் காட்டாமல் ரூ.100 கோடி சொத்துகளை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்தப் பண பரிவர்த்தனையை உறுதி செய்துள்ள வருமான வரித் துறை அதிகாரிகள், அதற்கு வருமான வரியாக ரூ.30 கோடி விதித்திருப்பதாகவும், அதற்கு அபராதக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருப்பதாகத் தெரிகிறது.


 

ஆனால், இந்தச் சோதனையில் ஒவ்வொருவர் வீட்டிலும், அலுவலகத்திலும் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், பணம், நகை பற்றிய தகவல்களை தெரிவிக்க வருமான வரித் துறையினர் மறுத்துவிட்டனர்.
 
இதில் முக்கியமாக நடிகர் விஜய் கடந்த 5 வருடங்களாக வரி ஏய்ப்பு செய்திருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. அவரது வீட்டிலிருந்தும் பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். 
 
படத்தில் உண்மையகவும், நேர்மையாகவும் வசனம் பேசி நடிக்கும் நடிகர்களின் உண்மை முகம் என்ன என்பதை பொதுமக்களும், ரசிகர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நடிகர் விஜய் “கத்தி” என்ற திரைப்படத்தில் இட்லி தத்துவம் ஒன்று சொல்வார். அதாவது “நம் வயிறு போதும் என்று கூறிய பிறகு நாம் சாப்பிடும் அடுத்த இட்லி மற்றவனுடையது” என்று சொல்வார். 
 
இப்படி எல்லாம் திரைப்படத்தில் பேசிவிட்டு, நிஜ வாழ்க்கையில் இப்படி வரி ஏய்ப்பு செய்யலாமா? என பொது மக்களும், சினிமா ரசிகர்களும் கேள்வி கேட்கின்றனர். 
 
எனினும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்த பிறகுதான் உண்மை தெரிய வரும்.