திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: மதுரை , சனி, 22 ஜூன் 2024 (10:17 IST)

அவதார புருஷர்களை வழிபட்டால் விரைவில் இறையருள் பெறலாம்-எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன் பேச்சு

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் அனுஷ உற்சவத்தை முன்னிட்டு மதுரை எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில்  கலைமாமணி திருப்பூர் கிருஷ்ணன் அவதார புருஷர்கள் என்ற தலைப்பில் பக்தி சொற்பொழிவு ஆற்றினார் அப்போது அவர் பேசியதாவது....
 
இல்லறத்தாறை இரட்சிப்பதற்காகவே அவதார புருஷர்கள் துறவு மேற்கொண்டு தவம் நிகழ்த்துகிறார்கள். அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்த  காஞ்சி பரமாச்சாரியார் தொடங்கி நம் பாரத தேசத்தை பெருமைப்படுத்திய துறவியர் அன்றும் இன்றும் பற்பலர். பிரம்மச்சாரி ஆகவே திருமணம் செய்து கொள்ளாமல் துறவு பூண்டு வாழ்ந்த ஆதிசங்கரர், சுவாமி விவேகானந்தர், மகரிஷி ரமணர், சேஷாத்ரி பரப் பிரம்மம் போன்றோர் அவதூதராக வாழ்ந்து அருள் புரிந்தவர்கள் ஏராளம். 
 
சமஸ்கிருத பாடல்களை  பொழிந்த சதாசிவ பிரம்மேந்திரர், திருமண உறவை தெய்வீக நிலைக்கு உயர்த்தி மனைவி சாரதா  தேவியையே பூஜித்த ராமகிருஷ்ண பரமஹம்சர், மணம் புரிந்து கொண்டாலும் மண வாழ்வில் ஈடுபடாத வள்ளலார், ஸ்ரீ அரவிந்தர், குழந்தை பெற்றபின் துறவியான ஸ்ரீ ராகவேந்திரர், புத்தர் என பாரத தேசத்து துறவியர்கள் பலவகை பட்டவர்கள். 
கடவுளை வழிபடுவதை விட தொண்டர்களை வழிபடுவது சிறந்தது என்கிறார் கிருபானந்த வாரியார் சுவாமிகள். 
 
வள்ளுவர் கள்ளுண்ணாமை பற்றி எழுதிய திருக்குறளை பேருந்துகளில் எழுதி அது டாஸ்மாக் கடை வழியே செல்கிறது. 
 
அனுஷ பூஜை நடத்துவதின் நோக்கம் எப்படிப்பட்ட தவ வாழ்க்கை வாழ்ந்த மகா பெரியவர் சொன்ன நல்ல விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும் திருமணத்தை எளிதாக நடத்துவது, பட்டுப் புடவையை பயன்படுத்தக் கூடாது, லஞ்சம் வாங்க கூடாது, போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது போன்று அவர் சொன்ன நல்ல விஷயங்களை நாம் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்.
 
இறைவனை வழிபடுவதோடு இறைவனின் அருளை பெற்ற அவதார புருஷர்களை வழிபட்டால் இறையருளை சீக்கிரம் பெற முடியும். 
பால் பிரண்டன் என்ற வெளிநாட்டு அறிஞர் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரை எழுத்தாளர் கே. எஸ். வெங்கட்ரமணி மூலம் சந்தித்தார். 
 
அவரது விழிகளில் கருணை மழை பொழிவதை பார்த்து பால் பிரண்டன் வியந்து போனார்.
 
வெறும் காலோடு செருப்பு இல்லாமல் வெயிலில் நடக்கிறோம். நேரடியாக தலையில் அடிக்கும் வெயிலின் சூடு நமக்கு தெரிவதில்லை. பொறுத்துக் கொள்கிறோம் ஆனால் சாலையில்  பிரதிபலிக்கும் வெயிலின் சூடு நம் உள்ளங்காலை சுடுகிறது. 
 
பாத சூட்டை நம்மால் பொறுக்க முடிவதில்லை. நிழல் தேடி ஓடுகிறோம். இறையருள் நேரடியாக கிட்டுவதை விடவும் அடியவர்களிடம்  பட்டு பிரதிபலித்து அவர்கள் மூலம் கிட்டுவது இன்னும் வலிமை வாய்ந்தது. எனவே தான் காஞ்சி பெரியவர் போன்ற அவதார புருஷர்களை அவர்கள் அவதரித்த புனித நாளில் வழிபடுவது போற்றுதலுக்குரியதாக கருதப்படுகிறது மட்டுமல்லாமல்
 நம் அனைவருக்கும் ஆனது என்கிறது இந்து மதம். அதனாலேயே நம் மதத்தில் பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்  பிரஸ்தம், சன்னியாசம் ஆகிய நான்கு படிநிலைகள் அனைவருக்கும் விதிக்கப்பட்டுள்ளன, இல்லறத்தாரும் மெல்ல மெல்ல காலப்போக்கில் வயது கூடும் போது துறவு மனநிலைக்கு வந்து சேர வேண்டும். வீட்டில்  இருந்த வாரே பற்றுகளை உதறி பற்றற்றான் பற்றினை பற்றி வாழத் தொடங்கினால் வீட்டிலும் அதன் வழியே நாட்டிலும் அமைதி உண்டாகும். 
 
அவதார புருஷர்களின் அருளால் வீடும் நாடும் செழிக்கும் என்றார்.