1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (05:44 IST)

வைகோ - கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

அடக்குமுறைகளுக்கு எதிராகவும், நியாயமான கோரிக்கைக்காகப் போராடுவோரின் குரல்வளையை நெறிப்பதை, ஜனநாயக நாட்டில் நிச்சயம் அனுமதிக்க முடியாது. காவல்துறையின் இந்த மிருகத்தனமான நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த நீண்ட காலமாகப் போராடிய காந்தியவாதி சசி பெருமாளை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினரை அநியாயமாக கைது செய்து காவல்துறை தனது முரட்டுத் தனமான போக்கைக் காட்டி உள்ளது.
 
கலிங்கப்பட்டியில் உள்ள மதுக்கடையை மூடக் கோரி போராட்டம் நடத்திய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ மீதும், அவர் தலைமையில் போராடிய மக்கள் மீதும் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி, வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடே நடத்தியிருக்கிறது காவல்துறை. இன்றைய தினம் சென்னையில் கல்லூரி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை எதிர்த்துப் போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவ மாணவிகள் மீது காட்டுமிராண்டித்தனமாக காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
 
சில மாணவிகளை பூட்ஸ் காலால் மிதித்து கைது செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட அடக்குமுறைகளையும், நியாயமான கோரிக்கைக்காகப் போராடுவோரின் குரல்வளையை நெறிப்பதையும் ஜனநாயக நாட்டில் நிச்சயம் அனுமதிக்க முடியாது. காவல்துறையின் இந்த மிருகத்தனமான நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மதுவுக்கு எதிராக தமிழகத்தில் கிளர்ந்து எழுந்திருக்கும் மக்களின் உணர்வுகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மதிப்பளித்துத்தான் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்தது. மாநிலத்தின் அமைதியையும், வளர்ச்சியையும் சீரழித்து விட்ட டாஸ்மாக் கடைகளின் மீது மக்கள் அந்த அளவிற்கு உச்சகட்ட வெறுப்பில் இருக்கிறார்கள் என்பதே வீதி வீதியாக மதுக்கடைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் தெளிவாக்குகின்றன.
 
ஆனால் மதுவிலக்கு விஷயத்தில் மக்கள் விரோத அதிமுக அரசின் அராஜகம் நிறைந்த அமைதியைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. செயலிழந்த அதிமுக அரசு, காந்தியவாதி சசிபெருமாளின் துரதிருஷ்டவசமான மரணத்திற்குப் பிறகும் கூட டாஸ்மாக் கடைகளையும், எலைட் டாஸ்மாக் கடைகளையும் திறக்க மும்முரம் காட்டுவது தமிழக மக்கள் நலனில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை என்பதை உணர்த்துகிறது.
 
மக்களின் நலன் பற்றி கவலைப்படாமல் அதிமுக அரசு நித்திரை மயக்கத்தில் இருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. பெண் முதல்வராக இருக்கும் மாநிலத்திலேயே பெண்களின் துயரங்கள் பற்றி கவலைப்படாத ஆட்சி நடக்கிறது என்பது வேதனைக்குறியது.
 
ஜனநாயக ரீதியாலான போராட்டங்களை அடக்க விரும்பும் இந்த அரசின் நிர்வாகம் முற்றிலும் தோல்வி அடைந்து விட்ட நிலையைக் காட்டுகிறது. அரசியல் சட்டப்படி மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்து விட்டு, தன்னெழுச்சியாகப் போராடும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல், மக்கள் எழுப்பும் மிக முக்கியமான மதுவிலக்குப் பிரச்சினையில் அதிமுக அரசு அமைதி காப்பது கவலை கொள்ள வைக்கிறது. மதுவிலக்குக் கொள்கையில் அதிமுக அரசு விழித்துக் கொள்ளும் முன்பு இன்னும் எத்தனை பேர் இறக்க வேண்டும்? எத்தனை குடும்பங்கள் சீரழிய வேண்டும் என்று அதிமுக அரசு எதிர்பார்க்கிறது என்று புரியவில்லை.
 
போராட்டக்காரர்கள் மீதும் சசிபெருமாள் குடும்பத்தினர் மீதும் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவ மாணவிகள் மீதும் தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது உடனே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன் மதுவிலக்குக் கொள்கை உடனே அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளேன்.