1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2015 (14:10 IST)

தமிழக அரசின் அவதூறு வழக்கை சந்திக்கத் தயார்: கருணாநிதி

தமிழக அரசு சார்பில் தன் மீது தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கை சந்திக்க தயார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.


 
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அவதூறாக தகவல்களை வெளியிட்டதாகக் கூறி முதல் அமைச்சர் ஜெயலலிதா என் மீது அவதூறு வழக்கு தொடுத்திருக்கிறாராம். இந்த ஆட்சியில் என் மீது போடப்பட்ட எத்தனையாவது அவதூறு வழக்கோ இது?
 
அரசியலுக்கு வந்தால் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ளும் பக்குவமும், சகிப்புத்தன்மையும் வேண்டும் என்பதை உணர்ந்தவன் நான்.
 
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றி “ஆனந்த விகடன்” எழுதியதும், அவதூறு வழக்கு போடுகிறார்களே, கடந்த 30 வாரங்களாக, வாரந்தோறும் ஒவ்வொரு அமைச்சரைப் பற்றியும், பல்வேறு குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டி அந்த இதழ் விமர்சனம் செய்தது பற்றி ஜெயலலிதா எந்த வழக்கும் போடவில்லையே? அதையெல்லாம் ஜெயலலிதா உண்மை என்று ஏற்றுக் கொள்கிறாரா?
 
ஜெயலலிதாவுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாகக் கூறி, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவருடைய துணைவியார் பிரேமலதா, அந்தக் கட்சியைச் சேர்ந்த பார்த்தசாரதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கழகப் பொருளாளர் மு.க. ஸ்டாலின், முரசொலி ஆசிரியர் செல்வம், “நக்கீரன்” இதழ் ஆசிரியர் கோபால் போன்றவர்கள் மீதும், பல பத்திரிகைகள் மீதும், தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் தமிழக அரசு அவதூறு வழக்குகளைத் தொடுத்துள்ளது. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளைத் தள்ளுபடி செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்து அது விசாரணையிலே உள்ளது.
 
வழக்கு விசாரணையின் போது, அவதூறு சட்டப் பிரிவுகளை தமிழக அரசு அரசியல் பழி வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்துகிறது என்ற வாதமும் வைக்கப்பட்டது. அப்போது இதைக் கேட்ட நீதிபதிகள், பல வழக்குகளில் அவதூறு தொடர்வதற்கான காரணங்களே இல்லை என்று கூறினார்கள். மற்றொரு அவதூறு வழக்கில், உச்ச நீதிமன்ற நீதியரசர் தீபக் மிஸ்ரா கூறும்போது “முதல்–அமைச்சரை ஊழல்வாதி என்று குறிப்பிடுவதே அவதூறு என்றால், எதிர்க்கட்சிகள் எதையுமே விமர்சிக்க முடியாதே” என்று வினவியிருந்தார்.
 
தற்போது ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடுத்திருக்கின்ற யாரும் ஜெயலலிதாவின் மிரட்டலுக்கோ, அவதூறு வழக்குகளுக்கோ அஞ்சி ஒதுங்கி விடுகின்றவர்கள் அல்ல. கடந்த ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா போடாத அவதூறு வழக்குகளா?
 
ஜெயலலிதா தொடுத்துள்ள வழக்கினை சட்ட ரீதியாக எதிர் கொள்ளப்போவதாக ஆனந்த விகடன் அறிவித்து விட்டது. என்னைப் பொறுத்தவரை, ஜெயலலிதா என் மீது தொடுத்திருக்கும் எத்தனையோ அவதூறு வழக்குகளில் இதுவும் ஒன்று என்பதால், சட்ட நியாயத்தை நிலைநாட்டிட இந்த வழக்கையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.