வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (11:28 IST)

காதல் மனைவி இறந்துவிட்டதாக நினைத்து கணவன் தற்கொலை! – காதலர் தினத்தில் நடந்த சோகம்!

crime
கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட சண்டையில் சுவரில் மோதிய மனைவி மயங்கிய நிலையில் அவர் இறந்து விட்டதாக எண்ணி கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தை அடுத்து உள்ள வெங்கமேடு வேலன்நகரில் வசித்து வந்தவர் செல்வம். இவரது மனைவி தீபா. இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் வேலைக்காக திருப்பூரில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்நிலையில் பிப்ரவரி 14ம் தேதியன்று செல்வம் – தீபா இடையே தகராறு எழுந்துள்ளது. வீட்டை பூட்டிக் கொண்டு இருவரும் சண்டை போட்ட நிலையில் வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த செல்வம், தீபாவை சுவற்றில் மோதியுள்ளார். இதில் தீபா மயங்கி சுருண்டு விழுந்துள்ளார். தீபா மூச்சு பேச்சில்லாமல் கிடப்பதை கண்டு அவர் இறந்து விட்டதாக நினைத்த செல்வம் தானும் அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


வீட்டிற்குள் குழந்தை நெடுநேரமாக அழும் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் செல்வம் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து சென்றபோது தீபாவுக்கு இன்னும் உயிர் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தீபா மயங்கி விழுந்தபோதே மருத்துவமனை சென்றிருந்தால் தீபாவும் பிழைத்திருக்கலாம். செல்வமும் தற்கொலை செய்துகொள்ள நேர்ந்திருக்காது. ஆனால் அவசரப்பட்டு செல்வம் எடுத்த முடிவால் காதல் தம்பதிகள் இருவருமே இறந்து 2 வயது குழந்தை அனாதை ஆகியுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K