1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: வியாழன், 18 செப்டம்பர் 2014 (10:57 IST)

தமிழ்நாட்டின் மனித உரிமை ஆணைய தலைவரை உடனே நியமிக்கவேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

மூன்று ஆண்டு காலமாக காலியாக உள்ள, தமிழ்நாட்டின் மனித உரிமை ஆணைய தலைவரை உடனே நியமிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மூன்று வருட காலமாக காலியாக உள்ள மாநில மனித உரிமை ஆணைய தலைவரை ஏன் இது வரை நியமிக்கவில்லை என்று  உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அத்துடன், அப்பதவிக்கு உடனடியாக புதிய தலைவரை நியமனம் செய்யவேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மாணவர்கள் தாக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காததால் மனித உரிமைகள் ஆணையம் தனது கடமையை செய்ய தவறிவிட்டதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ் தாகூர், ஆர். பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு 2011 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் மனித உரிமைகள் ஆணைய தலைவரை ஏன் நியமிக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

இப்பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் அப்பதவிக்குரிய நபரை தேர்வு செய்ய தேர்வு குழு ஒன்றை அமைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.