1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2016 (16:01 IST)

எந்த வகையில் சசிகலா? - தகவல் அறியும் உரிமை படி வழக்கறிஞர் மனு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மீது போர்த்தப்பட்ட தேசிய கொடி, எந்த உரிமையின் அடிப்படையில் சசிகலாவிடம் ஒப்படைக்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் மரணம் அடைந்தார். அவரின் உடல் செவ்வாய்கிழமை மாலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதியின் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
 
இந்நிலையில், ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவரின் அடக்கம் வரை சசிகலாவும், அவரது குடும்பமே எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருந்தது. மருத்துவமனையில் முதல்வர் நன்றாக உள்ளார்... பேசுகிறார்.... சாப்பிடுகிறார்.. என்றெல்லாம் மருத்துவர்களால் கூறப்பட்டது. ஆனால் அவரின் புகைப்படங்கள் கடைசி வரை வெளியாகவில்லை.
 
இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சில கேள்விகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி பதில் அளிக்க கோரி, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பிரம்மா என்பவர் தமிழக ஆளுநருக்கு மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த  மனுவில் குறிப்பிட்ட சில முக்கிய கேள்விகளின் விபரங்களாவது:
 
இறுதி சடங்கில் ஜெ.வின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடி, எதன் அடிப்படையில் சசிகலா நடராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது?
 
இறுதி சடங்கில் தேசிய கொடியை பெறுவதற்கு இந்திய அரசியலமைப்பின் சட்டத்தின்படி இறந்தவரின் வாரிசுதாரர்கள் யாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்?
 
இறந்தவரின் வாரிசுதாரர் அல்லாத நபரிடம் எந்த அடிப்படையில் ஒப்படைக்கலாம் என சட்ட விதிகள் உள்ளது என்ற விபரம் தர வேண்டும்.
 
முதல்வர் பதவியிலிருந்து ஜெயலலிதா எப்போது விடுவிக்கப்பட்டார்? முதல் அமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் எப்போது பதவியேற்றுக் கொண்டார்?
 
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக அரசு எத்தனை மணிக்கு வெளியிட்டது?
 
அப்பல்லோ மருத்துமனைக்கு மருத்துவ கட்டணம் மொத்தமாக எவ்வளவு செலுத்தப்பட்டுள்ளது என்பதை தேதி வாரியாக, பணம், வரைவோலை, காசோலை, வங்கி விபரம் உள்ள அனைத்து தகவல்ளோடு தர வேண்டும்” என வழக்கறிஞர் பிரம்மா, ஆளுநருக்கு அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.