ராம் மோகன் ராவ் இப்படித்தான் சிக்கினார்.....


Murugan| Last Updated: வியாழன், 22 டிசம்பர் 2016 (16:23 IST)
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ், வருமான வரித்துறை அதிகாரிகளின் வலையில் எப்படி சிக்கினார் என்பது பற்றி தகவல் வெளியாகியுள்ளது. 

 

 
தமிழக அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் மணல் குவாரி ஒப்பந்தங்களை பெற்று கோடிக் கணக்கில் பணத்தை சேர்த்தவர்தான் சேகர் ரெட்டி. அவரிடம் வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவரிடம் ரூ. 131 கோடி பணம், 177 கிலோ தங்கம் மற்றும் பல முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
 
அந்த ஆவணங்களை ஆய்வு செய்த போது அவர் தமிழகத்தில் பல முக்கிய உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு பினாமியாக செயல்பட்டுள்ளார் என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதன் பின் அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். அதில்தான், அவருக்கும் ராம் மோகன் ராவுக்கும் இடையே இருந்த தொடர்பு அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
 
தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்த ராம் மோகன் ராவ் மூலமாகத்தான் சேகர் ரெட்டி பல ஒப்பந்தங்களை பெற்றுள்ளார் என்பதும், அவர் மூலமாகத்தான் முக்கிய அமைச்சர்கள் மற்றும் போயஸ் கார்டனுக்கு அவர் நெருக்கமாகியுள்ளார் என்பதையும் அதிகாரிகள் தெரிந்து கொண்டனர்.
 
எனவே, மணல் குவாரிக்குளுக்கு அனுமதி வழங்கும் மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தில் உள்ள அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ராம் மோகன் ராவுக்கும், சேகர் ரெட்டிக்கும் இடையே உள்ள தொழில் ரீதியான நட்பு உறுதிப்படுத்தப்பட்டது.
 
மேலும், ஜெயலலிதா மரணம் அடைந்த அன்று ராம் மோகன் ராவ் பல மணி நேரம் சேகர் ரெட்டியிடம் தொலைபேசியில் பேசியுள்ளதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த உரையாடலை ஆய்வு செய்த போது, தன்னிடம் உள்ள பல கோடி ரூபாய் பணத்தை எப்படி பதுக்குவது என ராம் மோகன் ராவும், சேகர் ரெட்டியும் ஆலோசனை செய்துள்ளனர் என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
 
இப்படி கிடைத்த ஆதாரங்களே போதுமானதாக இருந்தாலும், ராம் மோகன் ராவிடமும் சில முக்கிய தகவல்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையில்தான் அவரின் சென்னை வீடு, திருவான்மியூரில் உள்ள அவரின் மகன் வீடு, ஆந்திராவில் உள்ள மற்றொரு வீடு, உறவினர்கள் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரின் அலுவலக அறை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை முதல் இரவு 7.30 மணி வரை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
 
அதில் பல முக்கிய ஆவணங்களோடு, 5 கோடி மதிப்புள்ள தங்கம், பல கோடி ரூபாய் பணம் சிக்கியது. முக்கியமாக அதில், ரூ.30 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :