வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 1 ஜூலை 2015 (12:25 IST)

ஹெல்மெட் அணிவதற்கான காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

தமிழக அரசு ஹெல்மெட் அணிவதற்கான காலக் கெடுவை நீட்டிப்பதற்கான உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இது குறித்து ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
ஹெல்மெட் அணிவது என்பது அவசியமான ஒன்று. அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஏனென்றால் பயணத்தில் கவனமும், பாதுகாப்பும் அவசியம். எனவே அதில் சமரசம் செய்து கொள்ள கூடாது.
 
இருப்பினும் இன்றைக்கு சாதாரண ஊதியத்தில் பணிபுரிபவர்கள் கூட இரு சக்கர வாகனத்தில் பயணம் செல்லும் நிலை இருக்கின்றது. அப்படி இருக்கும்போது அவர்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப செலவு செய்கிறார்கள்.
 
இதனைக் கருத்தில் கொண்டு ஹெல்மெட் விற்பனை செய்பவர்கள் சாதாரண மக்களின் பொருளாதார சூழலை பாதிக்காத வண்ணம் நியாயமான விலையில் விற்க வேண்டும்.
 
அப்பொழுது தான் பொது மக்கள் அனைவரும் ஹெல்மெட்டை விரும்பி வாங்க முன்வருவார்கள். மாநில அரசு அதைச் சார்ந்த துறையின் மூலம் இதனை முறையே கண்காணிக்க வேண்டும்.
 
மேலும் போக்குவரத்து காவல் துறையினர் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை எச்சரித்து அனுப்ப வேண்டும். அவர்களை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்க கூடாது.
 
எனவே இந்த இரண்டு பிரச்சனைகளிலும் இருந்து பொது மக்களுக்கு அவசர விடுவிப்பு தேவை. அதற்காக தமிழக அரசு ஹெல்மெட்டை பொது மக்கள் கட்டாயம் அணிவதற்கு இன்னும் 3 வார கால அவகாசம் நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
 
எனவே தமிழக அரசு ஹெல்மெட் அணிவதற்கான காலக் கெடுவை நீட்டிப்பதற்கான உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.