செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 28 செப்டம்பர் 2024 (12:53 IST)

3 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த சுகாதார பணியாளர்களுக்கு பணி நிரந்தரம்: ஐகோர்ட் உத்தரவு

தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் சுகாதாரப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி, கரூர், நாமக்கல் ஆகிய மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்ட பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் சுகாதார பணியாளராக பணியாற்றும் 81 பேர் தங்கள் பணிகளை நிரந்தரம் செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தூத்துக்குடி, நாமக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட்ட தற்காலிக ஊழியர்கள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணி செய்துள்ளார்கள் என்றும் அவர்களை பணி நிரந்தரம் செய்ய தகுதியானவர்கள் என கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது என்றும் தெரிவித்தார். இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ள நிலையில், மனுதாரர்களாகிய 81 பேருக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார்.

இதையடுத்து, மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணி நிரந்தரம் செய்வது குறித்து ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து அரசு மனு தாக்கல் செய்துள்ளதாகவும்,  சுப்ரீம் கோர்ட்டில் அந்த மனு தற்போது நிலுவையில் உள்ளது என்றும் கூறினார்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்தாலும், ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதிக்கவில்லை என்றும், எனவே மூன்று ஆண்டுகள் தற்காலிக பணி செய்து முடித்தவர்கள் நிரந்தர பணி செய்ய தகுதியானவர்கள் என்றும், அவர்களை உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Edited by Mahendran