1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 30 ஜனவரி 2015 (18:57 IST)

மாணவிகள், ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்து 500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
 
இந்த பள்ளியின் தலைமையாசியர் குமாரசாமி, முதுகலை ஆசிரியர் உதயசூரியன், பட்டதாரி ஆசிரியர் மணிவண்ணன் ஆகியோர் பள்ளியில் பயிலும் மாணவிகள் மற்றும் பயிற்சி ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கின்றனர் என்று கடந்த நவ.25ல் முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் வந்தது. இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் பள்ளியில் விசாரணை நடத்தினார்.
 
விசாரணை நடைபெறுவதை அறிந்த பொதுமக்கள் பள்ளி முன்பு முற்றுகையிட்டனர். விசாரணைக்கு பின்னர் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் முதன்மை கல்வி அலுவலர் உறுதியளித்தார். இதையடுத்து முற்றுகையை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 
கிராம மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், புகாருக்கு உள்ளான 3 ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்தார். பின்னர் இணை இயக்குநர், 5 பேர் கொண்ட மகளிர் குழு, முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அடங்கிய குழு என இந்த புகார்கள் குறித்து 3 கட்ட விசாரணை நடந்தது.
 
இதன் அடிப்படையில் 3 குழுவினர் அளித்த விசாரணை அறிக்கையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் குற்றம் உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தலைமையாசிரியர் குமாரசாமி, முதுகலை ஆசிரியர் உதயசூரியன், பட்டதாரி ஆசிரியர் மணிவண்ணன் ஆகிய 3 பேரையும் பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.