'ராம்குமார் காவலில் சட்டவிரோதம் இல்லை' - வழக்கறிஞர் மனு நிராகரிப்பு
உச்சநீதிமன்ற உத்தரவின்படிதான், போலீசார் ராம்குமாரை காவலில் எடுத்திருக்கிறார்கள் என்பதால், இதில் சட்டவிரோதம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை, மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வழக்கறிஞர் ராமராஜ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பாக திங்களன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவின்படிதான், போலீசார் ராம்குமாரை காவலில் எடுத்திருக்கிறார்கள் என்பதால், இதில் சட்டவிரோதம் இல்லை.
எனவே, அவரை போலீஸ் காவலில் எடுப்பதற்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க முடியாது என்று நீதிபதி கூறி விட்டார்.