1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 5 அக்டோபர் 2019 (18:02 IST)

நகைக்கடை கொள்ளையன் எனக்கு சால்வை போத்தினாரா?- உண்மையை வெளியிட்ட எச்.ராஜா!

திருச்சி நகைக்கடையை கொள்ளையடித்தவர்களில் ஒருவர் பாஜக தொண்டர் என்றும், அவர் எச்.ராஜாவுக்கு சால்வை அணிவிப்பதாகவும் வெளியான புகைப்படம் குறித்து தனது ட்விட்டரில் உண்மையை பகிர்ந்துள்ளார் எச்.ராஜா.

திருச்சி நகைக்கடையை கொள்ளையடித்த திருவாரூரை சேர்ந்த மூன்று கொள்ளையர்கள் பிடிபட்டனர். அதில் ஒருவர் பாஜகவை சேர்ந்தவர் என திமுக சார்ந்த ட்விட்டர் கணக்கு ஒன்றில் செய்தி வெளியாகியது. அந்த கொள்ளையர் எச்.ராஜாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் ஒரு புகைப்படமும் அதில் பகிரப்பட்டது. இந்த பதிவை மன்னார்குடி திமுக எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜாவும் தனது ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அந்த புகைப்படம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளார். அந்த புகைப்படத்தில் இருப்பவர் திருச்சி கொள்ளையில் ஈடுபட்டவர் இல்லையாம்! பார்க்க பிடிப்பட்ட கொள்ளையன் சாயல் தெரிந்தாலும் உண்மையில் அவர் ஆர்.கே.நகர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சயீத் என்பவர் என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தில் இருப்பது எச்.ராஜாவே இல்லையாம்! டிடிவி தினகரனின் உறவினர் மன்னார்குடி திவாகரன்தான் அந்த புகைப்படத்தில் இருக்கிறார். அங்கே தனது தலையை மட்டும் போட்டோஷாப்பில் மார்பிங் செய்து இணைத்துள்ளனர் என விளக்கம் அளித்துள்ளார்.

கொள்ளையர்களுடன் தன்னையும், பாஜகவையும் இணைத்து போலியான செய்திகளை வெளியிட்ட திமுகவினருக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளார் எச்.ராஜா.