1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 27 டிசம்பர் 2017 (11:55 IST)

அதிமுகவுடன் மோதல் - டெல்லியின் குரலை பிரதிபலித்த குருமூர்த்தி?

டெல்லி மேலிடத்தின் கருத்துகளைத்தான் ஆடிட்டர் குருமூர்த்தி பிரதிபலித்தார் என செய்திகள் வெளிவந்துள்ளது.

 
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவை அடுத்து, தினகரன் ஆதரவாளர்கள் சிலர் மீது முதல்வர் எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு நடவடிக்கை எடுத்தது. அந்நிலையில், பாஜக ஆதரவாளரும், துக்ளக் ஆசிரியருமான ஆடிட்டர் குருமூர்த்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “6  மாதம் கழித்து நடவடிக்கை எடுத்துள்ளனர் ஆண்மையற்ற அதிமுக தலைவர்கள்” என விமர்சித்தார். இது அதிமுகவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
 
அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டத்தை தெரிவித்திருந்தார். இதுபற்றி விளக்கம் அளித்த குருமூர்த்தி “ திறனற்றவர்கள் என்றுதான் விமர்சித்தேன். அதிமுகவினருக்கு வேறு மாதிரி அர்த்தம் இருந்தால் என் தவறு இல்லை. இவர்கள் எதிர்ப்பு ஒரு குழந்தை விளையாட்டு. காலில் விழுவதையே அரசியல் கலாச்சாரமாக கொண்டவர்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.

 
இந்த விவகாரம் அதிமுகவினருக்கும், குருமூர்த்திக்கும் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், ஆர்.கே.நகரில் அதிமுக தோற்றது, தினகரன் ஆதரவாளர்கள் மீது கால தாமதமாக நடவடிக்கை எடுத்தது என எடப்பாடி தரப்பு மீது டெல்லி மேலிடம் கொண்ட கோபத்தைதான் குருமூர்த்தி பிரதிபலித்துள்ளார் எனக் கூறப்படுகிறது. 
 
இத்தனைக்கும் ஓபிஎஸ்- எடப்பாடி அணி ஒன்றாக இணைய காரணமாக இருந்தவர்தான் குருமூர்த்தி. அமைச்சர் தங்கமணியும், வேலுமணியும் அவரின் வீட்டிற்கே சென்று இதுபற்றி பேசினார்கள் என அப்போதே செய்திகள் வெளியானது.
 
ஆனால், தற்போது எடப்பாடி-ஓபிஎஸ் இருவரையும் காட்டமாக குருமூர்த்தி விமர்சித்திருப்பது டெல்லி மேலிட கோபத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது. இவர்களின் செயல்பாடு சரியில்லை. அதனால்தான் இரட்டை இலைக்கு வாக்களிக்காமல் மக்கள் தினகரனுக்கு வாக்களித்துள்ளனர் என பாஜக தரப்பு நம்புவதாக தெரிகிறது.
 
ஏனெனில், ஜெ.வின் மரணத்திற்கு பின் எடப்பாடி - ஓபிஎஸ் ஆகியோரை வைத்து, அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் கால் பதிக்க பாஜக கணக்குப் போட்டது. ஆர்.கே.நகர் தேர்தலின் முடிவுகள் வேறு மாதிரி சென்று விட்டதில் மோடி தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், அந்த கோபத்தைதான் குருமூர்த்தி பிரதிபலித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.