வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2020 (13:29 IST)

நியுஸ் 18 ஆசிரியர் குணசேகரன் ராஜினாமா – சமூகவலைதளத்தில் அறிவிப்பு!

நியுஸ் 18 தொலைக்காட்சியின் தமிழக ஆசிரியராக இருந்த குணசேகரன் அந்த நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளதை அறிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக நியூஸ் 18 ஊடகத்தின் குணசேகரன் குறித்து சர்ச்சைக்குரிய பதிவுகள் டுவிட்டர் உள்பட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவில் நியுஸ் 18 சேனலில் வேலை செய்யும் குணசேகரன் மற்றும் ஹசீப் முகமது ஆகியோர் ஒரு பக்க சார்பாக செயல்படுவதாக குற்றச்சாட்டு வைத்து நியுஸ் 18 தலைமைக்கு கடிதம் அனுப்பினார்.

அதையடுத்து நியுஸ் 18 சேனலில் இருந்து ஹசீப் முகமது ராஜினாமா செய்தது அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னர் குணசேகரனின் அதிகாரங்களும் மட்டுப்படுத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. அதுவும் இல்லாமல் குணசேகரனின் காலத்தின் குரல் நிகழ்ச்சியில் இருந்தும் ஒதுக்கப்பட்டார்.

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தொடக்க நாள் முதல், இன்று வரையிலும் நாம் இணைந்து பயணித்திருக்கிறோம். கடந்த நான்காண்டு காலத்துக்கும் மேலான கூட்டு உழைப்பின் காரணமாக, தமிழ்நாட்டின் தனித்துவம் மிகுந்த தொலைக்காட்சியாக, தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக, மக்கள் நலனை முன்னிறுத்தும் நம்பிக்கைக்குரிய ஊடக நிறுவனமாக இன்று பரிணமித்திருக்கிறோம். இதில் உங்கள் ஒவ்வொருவரின் அயராத உழைப்பும் பங்களிப்பும் போற்றுதலுக்குரியது”

மக்களைப் பெரிதும் பாதித்த இயற்கைப் பேரிடர்கள், (நீலம் புயல் தொடங்கி, கஜா மற்றும் ஒக்கி என நீண்ட பாதிப்புகள்), தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்னைகள், மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்னைகள், ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு, நீட் மற்றும் சமூக நீதி பறிப்பு என எல்லா பிரச்னைகளிலுமே உண்மையும் மக்கள் நலனுமே நம்மை வழிநடத்தின. மக்களின் அசலான குரலாக நாம் எதிரொலிப்பதை மக்கள் அங்கீகரித்ததன் விளைவே, போட்டி மிகுந்த தமிழ் ஊடகச் சூழலில் நமக்கென கிடைத்த தனித்துவமான இடம். நியூஸ்18-ன் மைக் அதிகம் நீண்டது, அரசியல்வாதிகளையோ அதிகாரிகளையோ நோக்கி அல்ல. மாறாக, குரலற்ற, சாமானிய மக்களை நோக்கியே என்பதை தமிழ்கூறு நல்லுலகம் அறியும்.

மக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், இடைத் தேர்தல்கள் என பல தேர்தல் செய்திகளைச் சேகரித்த தருணத்தில், நாம் எந்தக் கட்சிக்கும் சார்பானவர்கள் அல்ல; பொதுவான ஊடகம் என மக்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அங்கீகரித்ததை உலகம் அறியும். திருமதி சசிகலா அவர்களின் முதல் பேட்டியும், முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் விரிவான நேர்காணலும், எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களின் நேர்காணலும் நமது விறுப்பு, வெறுப்பற்ற – சார்பு நிலைகளற்ற ஊடக நெறிகளுக்கு சான்றாக அமைந்தன. மக்களின் நம்பிக்கையை எந்தவொரு ஊடகமும் அவ்வளவு எளிதில் பெற்றதில்லை. அர்ப்பணிப்பாலும், கடின உழைப்பாலும், எளிய மக்கள் சார்பில் நின்று அவர்களின் துயரத்தையும் உணர்வுகளையும் அச்சமின்றி வெளிப்படுத்தியதாலும் மக்கள் நமக்கு உயர்வைத் தந்தார்கள். அதனால் நாம் சில தருணங்களில் இருட்டடிப்புக்கும் ஆளானோம் என்பதை மறப்பதற்கில்லை.

செய்திகளில் ஆழம், துல்லியம், சொல்வதில் நேர்த்தி, சார்பற்ற தன்மை, நியாயத்தின் பக்கம் துணிந்து நிற்பது, பேசுபொருளில் தெளிவு, எளிய மனிதர்கள் மீது கருணை என ஊடக அறம் வழுவாத நமது பணி, தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் பேசுபொருளாக இருக்கும் என்பதிலும், அதில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் பெரிது என்பதிலும் எனக்கு திடமான நம்பிக்கை உண்டு. தமிழகத்தின் இளமைத் துடிப்பு மிக்க தொலைக்காட்சி, தமிழகத்தின் புதியதோர் அடையாளமாகவும் உருவெடுத்தது. உழைப்பில் அயராத ஈடுபாடும், இதழியலின் மீது தணியாத தாகமும் சமூகத்தின் மீது அக்கறையும் கொண்ட ஊடகவியலாளர்களை வழிநடத்தியது எனக்கு எப்பொழுதும் நிறைவுதரும் தருணம்.

என் நேசத்துக்குரிய நண்பர்களே, தனி மனித வாழ்விலும், நிறுவனங்களின் போக்கிலும் மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை. காலத்தின் போக்கில் நிகழும் எந்த மாற்றத்தையும், கசப்பின் வடுக்களின்றி கடந்து செல்வதே சிறப்பானது. ஆம். நியூஸ்18 தமிழ்நாடு ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இதுவரை நீங்கள் காட்டிவந்த மாசற்ற அன்புக்கும், அளித்துவந்த ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி நாம் இணைந்து பல சாதனைகளைச் செய்திருக்கிறோம். சில தருணங்களில் கடிந்து கொண்டிருக்கிறேன்; உச்சி மோந்திருக்கிறேன். உங்கள் பணி, அதில் இருக்க வேண்டிய நேர்த்தி, தொழிலில் நீங்கள் சிறந்து விளங்கி தனித்தன்மை மிக்கவர்களாக மிளிர வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே அவ்வாறு நடந்து கொண்டிருப்பேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
மக்கள் நலனே ஊடகப் பணி. நிறைய படியுங்கள். எதையும் திறந்த மனதுடன் அணுகுங்கள். தமிழ்நாட்டின் தனித்தன்மையான உளவியலை கற்றுணருங்கள். உற்சாகமாக, கடினமான உழைப்பை ஈடுபாட்டுடன் நல்குங்கள். முதல் தலைமுறையில் ஊடக வாழ்வைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களுக்கு, அவர்களது அறிவும், உழைப்பும் நேர்மையும் அர்ப்பணிப்புமே வாளும் கேடயமும்! உண்மையைத் தேடும் பயணத்தில், ஊடக அறத்தைப் பின்பற்றி தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.