வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 8 அக்டோபர் 2015 (08:25 IST)

பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்: பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

ஜாக்டோ அமைப்பினர் வேலை நிறுத்தம் என்று அறிவித்தபோதிலும் பள்ளிக்கூடங்கள் இன்று வழக்கம் போல செயல்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
 
தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 825 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் இன்று மாநிலம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
 
இந்நிலையில், பள்ளிக்கூடங்கள் இன்று வழக்கம்போல செயல்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறியதாவது:-
 
பள்ளிக்கூடங்கள் அனைத்தும் இன்று திறந்து இருக்கும். வழக்கம்போல பள்ளிக்கூடங்கள் அனைத்தும் செயல்படும். ஜாக்டோ அமைப்பினர் தவிர 23 சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் பணிக்கு வருவார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் ஆகியோர் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவார்கள்.
 
அதன் மூலம் கலெக்டர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், அந்தந்த பகுதி காவல் நிலைய அதிகாரிகள் ஆகியோர் துணையுடன் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் திறந்து இருக்கும். ஆசிரியர்கள் தைரியமாக பள்ளிக்கூடங்களுக்கு வரலாம். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.  இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.