வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : வெள்ளி, 31 அக்டோபர் 2014 (12:22 IST)

நான் பொம்மையா? - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பதவி விலகினார்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், நேற்று பதவி விலகினார். கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் புதிய உறுப்பினர் அட்டையில், காமராஜர், மூப்பனார் படங்கள் இடம் பெறுவது தொடர்பான பிரச்சினை, அவரது விலகலுக்கு ஒரு காரணமாக உள்ளது.
 
நாடு முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளைக் காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. தமிழக காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர் அட்டையில், காமராஜர், மூப்பனார் படங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், மேலிடமோ, சோனியா, ராகுல் படங்கள் கொண்ட உறுப்பினர் அட்டையை மட்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஞானதேசிகன் பதவி விலகியுள்ளார்.
 
மேலும், அவரது ஒப்புதலைப் பெறாமல் தமிழ்நாடு மாநிலக் காங்கிரஸின் சில பொறுப்புகளுக்குத் தில்லி காங்கிரஸ் சிலரை நியமித்துள்ளது. இது, ஞானதேசிகனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 'நான் ஒரு பொம்மைத் தலைவராக இருக்க விரும்பவில்லை' என அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 6 மாத காலமாகத் தாம் கூட்டிய கூட்டங்களில் ப.சிதம்பரம் கலந்துகொள்ளவில்லை. அவரது ஆதரவாளர்களும் கலந்துகொள்ளவில்லை. அவர்கள், கட்சியைப் பிளவுபடுத்த முயல்கிறார்கள் என்றும் ஞானதேசிகன் குற்றம் சாட்டியுள்ளார்.
 
காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக பி.எஸ்.ஞானதேசிகன், கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.