வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 18 ஜனவரி 2024 (12:14 IST)

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.! அரசுக்கு ஜி கே வாசன் வைத்த முக்கிய கோரிக்கை.!!

தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றியதால் வடசென்னை, மத்திய சென்னை மக்கள் அவதிபடுகிறார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்  ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
 
இதுதொடர்பாக  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையின் அமைப்பு என்பது கிழக்கு பக்கம் கடலும், வடக்கு பக்கம் ஆந்திரா எல்லையையும் கொண்டது, எனவே சென்னையின் விரிவாக்கம் என்பது நான்கு திசைகளிலும் மேற்கொள்ள சாத்தியமில்லை என்ன தெரிவித்துள்ளார்
 
குறிப்பாக தென் சென்னை விரிவாக்கத்திற்கு சாத்தியமாக இருந்த காரணத்தால், காலப் போக்கில் விரிவடைந்தது. ஆனால் உண்மையில் சென்னையின் அது பூர்வகுடிகளும், பலதலைமுறையாக தென் மாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்தவர்களும் வசிக்கும் பகுதி என்பது வட சென்னையும், மத்திய சென்னையும் ஆகும். இன்று அந்த வடசென்னை, மத்திய சென்னை பகுதி பூர்வகுடி மக்களுக்கு, தங்கள் தென் மாவட்டங்களுக்கு செல்ல சுமார் 40 கிலோ மீட்ட தூரத்திற்கு புறநகர் பேருந்து நிலையம் இல்லை என்று ஜி கே வாசன் வேதனை தெரிவித்துள்ளார்.

kilambakkam bus
 
சென்னை பெருநகரம் என்பது 1.25 கோடி மக்கள் தொகையை கொண்ட பகுதி, எனவே சென்னை மக்கள் குறிப்பாக தமது சொந்த தென் தமிழக மாட்டங்களுக்கு பயணப்பட ஒரு புறநகர் பேருந்து நிலையம் போதாது.  வட சென்னை, மத்திய சென்னை மக்கள் பயன் பெரும் வகையில் சென்னைக்கு இரண்டு புறநகர் பேருந்து நிலையங்கள் இருப்பதுதான் நியாயமானது என்று ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்
 
சென்னையில் சாலை போக்குவரத்து நெரிசலை போக்கவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டது, நோக்கம் சரிதான். ஆனால் கிளாம்பாக்கத்தில் இறங்கியவர்களை சென்னைக்கு அழைத்துவர மாநகர போக்குவரத்து மூலம் தானே அழைத்துவர வேண்டும். அது நெரிசலை ஏற்படுத்தாதா என்று கேள்வி எழுகிறது. அதோடு மாநகர போக்குவரத்து ஒவ்வொரு நிறுத்ததிலும் நின்று செல்லும், அது நேரத்தை விரையமாக்கும் நீண்ட தூரம் பயணம் செய்து மீண்டும் கிளாம்பாக்கத்தில் இருந்து பயணம் செய்வது பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார்.

 
ஆகவே வடசென்னை மற்றும் மத்திய சென்னை மக்களின் வேண்டுகொளுக்கு இணங்க, அரசு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும் சரிபாதியான எண்ணிக்கையில் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று ஜி கே வாசன் குறிப்பிட்டுள்ளார்.