1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 7 ஆகஸ்ட் 2015 (04:38 IST)

சசிபெருமாள் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக திமுக துணை நிற்கும்: கருணாநிதி

காந்தியவாதி சசிபெருமாள் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக திமுக என்றைக்கும் துணை நிற்கும் என்றும், சசிபெருமாள் இறுதி சடங்கில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என்றும் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், மிகச் சிறந்த காந்தியவாதியுமான சசிபெருமாள் கடந்த 23-7-2015 அன்று சென்னையில் என் இல்லத்தில் என்னை சந்தித்து, திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கினை நடைமுறைப் படுத்த நடவடிக்கை மேற்கொள்வோம் என்று நான் விடுத்த அறிக்கைக்காக நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.
 
சசிபெருமாள் தனது குழுவினருடன் என்னைச் சந்தித்த அவர் நீண்ட நேரம் மதுவிலக்கைப் பற்றியே பேசியதோடு, தமிழகத்தில் மாத்திர மல்லாமல் அகில இந்திய அளவில் மதுவிலக்கு சட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் என்னிடம் கூறினார்.
 
அதன்பிறகு கீழே இறங்கிச் சென்ற அவர், கோபாலபுரம் இல்லத்து வாயிலிலேயே அவரைச் சந்தித்த செய்தியாளர்களிடம் எனக்கு நன்றி தெரிவித்த விவரங்களையும் கூறிவிட்டுத் தான் சென்றார். ஆனால் அவர் என்னைச் சந்தித்து சென்ற பிறகு, அடுத்த வாரமே ஜூலை 31 அன்று குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் மது விற்பனைக் கூடத்தை மூட வேண்டுமென்ற போராட்டத்திலே ஈடுபட்டு, அதன் காரணமாகவே எதிர்பாராத விதமாக பலியான தியாக வரலாற்றினைக் கண்டும் கேட்டும் சொல்லொணா துயரை அடைந்ததோடு அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னமும் விடுபட முடியாத நிலையிலே இருக்கிறோம்.
 
கடந்த 31ஆம் தேதி அவர் மறைந்த போதிலும், ஒரு வார காலமாக அவருடைய இறுதி அடக்கம் கூட நடைபெற முடியாத நிலையில் இன்று தான் அவருடைய உடல் அவருடைய குடும்பத்தினரால் பெறப்பட்டு, ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று அவருடைய இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
 
இந்த நேரத்தில், அவர் என்னைச் சந்தித்து உரையாடிய அந்த நினைவுகள்தான் என் உள்ளத்தை ஆக்ரமித்துள்ளது. அவரது இறுதி சடங்கில் திமுக சார்பில் பொருளாளர் மு.க. ஸ்டாலினும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.
 
இந்த நிலையில் அவருடைய குடும்பத்தாரின் துக்கத்தில் திமுக பங்கேற்கிறது என்பதை மிகவும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்வதோடு, அவரது  குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காக திமுக என்றைக்கும் துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.