'தொப்பி'யை அடுத்து மேலும் ஒரு சிக்கல்! தினகரன் பெயரில் மேலும் 3 வேட்பாளர்கள்
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டிடிவி தினகரன் தனக்கு தொப்பி சின்னம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் இதே சின்னத்தை மேலும் 29 பேர் கேட்டுள்ளதால் தினகரனுக்கு தொப்பி கிடைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு ஓட்டு போடும் வாக்காளர்களை குழப்ப மேலும் மூன்று பேர் தினகரன் பெயரில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகின்றனர். இவர்கள் மூவரும் டிடிவி தினகரனுக்கு முன்பே வரிசைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் அதிகாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுவின்படி முதல் பெயராக பகுஜன் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பெயரும், இரண்டாவதாக பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் பெயரும் உள்ளது. இதனையடுத்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், நாம் தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் ஆகியோர் பெயர்கள் உள்ளன.
பின்னர் சுயேட்சைகள் வரிசையில் 46வது இடத்தில் டிடிவி தினகரன் பெயர் உள்ளது. ஆனால் இவருக்கு முன்பாக கே.தினகரன், ஜி.தினகரன், எம்.தினகரன் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.