ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2024 (12:54 IST)

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கைது.! நில மோசடி வழக்கில் அதிரடி.!!

vijayabaskar
நிலமோசடி வழக்கில் கேரளாவில் பதுங்கி இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
 
கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை தனது மனைவி, மகளை மிரட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் காவல்நிலையத்தில் கடந்த ஜூன் 14ம் தேதி புகார் செய்திருந்தார். 
 
இதேபோல் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதரும், போலியான சான்றிதழ்கள் கொடுத்து நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மற்றும் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் கொடுத்தார். சார்பதிவாளர் அளித்த புகாரின்பேரில் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், நில உரிமையாளர் பிரகாஷின் மகள் ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோல் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், பிரவீன் உட்பட 6 பேர் மீது கொலை மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் பிரகாஷ் வாங்கல் பகுதியில் வசிப்பதால், இவர் கொடுத்த புகார் மட்டும் வாங்கல் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
 
இதற்கிடையே, நில மோசடி வழக்கு கடந்த 14ம் தேதி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்தார். அவரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு, நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

இதனிடையே முன்ஜாமீன் கேட்டு விஜயபாஸ்கர், கடந்த 12ம் தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். கடந்த 25ம் தேதி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சிகிச்சையின்போது அவருடன் இருக்க வேண்டும் எனக்கூறி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2வது முறையாக முன்ஜாமீன் கோரி கடந்த 1ம் தேதி மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவையும் நீதிபதி சண்முகசுந்தர் தள்ளுபடி செய்தார்.

 
இந்நிலையில் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கேரளாவில் பதுங்கி இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரது உறவினர் பிரவீன் என்பவரும் கைது செய்யப்பட்டார். கைதான எம்.ஆர் விஜயபாஸ்கரை தமிழகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.