1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 20 ஜூன் 2024 (12:44 IST)

கள்ளக்குறிச்சி விவகாரம்..! விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி..!!

Kallakurichi
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணையை தொடங்கி உள்ளனர்.
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு  வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிறு எரிச்சலால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இவர்களில் சிகிச்சை பலனின்றி  35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் 91 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே விஷச் சாராய விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் ஆய்வு செய்து வருகிறார். கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் சிபிசிஐடி ஐ.ஜி. அன்பு ஆய்வு மேற்கொண்டுள்ளார். 
 
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரி கோமதி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்.பி. வினோத் சாந்தாராம் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்னர். 

 
மரணம் விளைவித்தல், விஷத்தையோ அல்லது மயக்கமடையச் செய்யும் போதைப்பொருளையோ விற்றல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்கு பிறகு கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.