வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 11 டிசம்பர் 2015 (15:08 IST)

முதல் தளத்தில் வசிப்பவர்களுக்கு நிவாரண நிதி இல்லையா?: ராமதாஸ் ஆவேசம்

தரைத்தளத்தில் உள்ள வீடுகளுக்கு மட்டும் இழப்பீடு என்றும் முதல் தளம் மற்றும் அதற்கு மேல் உள்ள தளங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படாது என்றும் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாற்றியுள்ளார். 


 

 
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– 
 
தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் போதாது என்று பொது மக்கள் கூறியுள்ள நிலையில், இந்த உதவி மக்களுக்கு கிடைக்காமல் முடக்க முயற்சிகள் நடை பெறுகின்றன.
 
நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைக் கணக்கெடுக்கும் பணிகள் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தொடங்கியுள்ளன.
 
வெள்ளம் பாதித்த குடும்பங்களை வீடு வீடாகச் சென்றுதான் கணக்கெடுக்க வேண்டும்.  சென்னையில் மழை மற்றும் வெள்ளத்தால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தரைத்தளத்தில் உள்ள வீடுகளை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் இழப்பீடு வழங்க முடியும் என்றும், முதல் தளம் மற்றும் அதற்கு மேல் உள்ள தளங்களில் வசிப்பவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படாது என்றும் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
தரைத்தளத்திற்கு மேல் வசிப்பவர்களுக்கு நிவாரண நிதி கேட்டு வரும்போது அவர்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்ய மறுத்து திருப்பி அனுப்புகின்றனர். 
 
வரலாறு காணாத மழையால் சென்னையில் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பல இடங்களில் 12அடி உயரத்திற்கு வெள்ளம் கரை புரண்டு ஓடியிருக்கிறது; தரைத்தளத்தை தாண்டி முதல் தளத்திலும், இன்னும் சில இடங்களில் இரண்டாவது தளத்திலும் வெள்ளம் புகுந்துள்ளது.
 
பல அடுக்கு மாடி குடியிருப்புகளில் வாகனம் நிறுத்துமிடத்தை தாண்டி முதல் மாடிக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. இதனால் அந்த வீடுகளில் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
 
மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள ரூ.5,000 நிதி வெள்ளம் புகுந்த வீடுகளை சுத்தம் செய்வதற்கு கூட போதாது என்பதால் நிவாரண நிதியை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
 
தரைத் தளங்களில் அதிக அளவில் வெள்ளம் புகுந்ததால் அங்கிருந்த வீட்டுப் பயன்பாட்டு பொருட்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. இவற்றின் மதிப்பு பல ஆயிரங்களில் தொடங்கி சில லட்சங்கள் வரை இருக்கும்.
 
இந்த இழப்பை அக்குடும்பங்களால் தாங்க முடியாது. எனவே, சேதமடைந்த பொருட்களுக்கு முழுமையாக இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட அளவுக்காவது இழப்பீடு வழங்க வேண்டும்.
 
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்த விவரங்களை அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கே சென்று பதிவு செய்ய வேண்டும் என்று கணக்கெடுப்புக் குழுவினருக்கு அரசு அறிவுறுத்த வேண்டும். கணக்கெடுப்பு நடத்தப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட வேண்டும்.  இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.