1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: திங்கள், 4 மே 2015 (11:37 IST)

இந்திய கடல் மண்டலத்தில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களை அனுமதிக்க கூடாது: ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

இந்தியாவின் பிரத்யேக கடல் மண்டலத்தில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களை அனுமதிக்க கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
 
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:–
 
இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களை அனுமதிக்கும் வகையில், மத்திய அரசு அண்மையில் மேற்கொண்ட 2 முடிவுகள் குறித்து தங்களின் (பிரதமர்) கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
 
மத்திய விவசாயம், கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை அமைச்சகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி புதிய ஆழ்கடல் மீன்பிடிப்பு கொள்கைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களின் ஒட்டுமொத்த நீளம், 20 மீட்டரில் இருந்து 15 மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மீன்பிடி பணியாளர் என்பதற்கான வரையறையும் விரிவாக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி, 49 சதவீத அந்நிய பங்கு மூலதனம் கொண்ட கூட்டு நிறுவனங்களும் இந்த வரையறையின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், மீன்பிடிப்பில் வெளிநாட்டு ஊழியர்களை பயன்படுத்தும் நடைமுறைகளும் எளிமையாக்கப்பட்டுள்ளன.
 
மத்திய அரசிடம் இருந்து முன் அனுமதி பெறவேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. மேலும், பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் 15 மீட்டர் முதல் 20 மீட்டர் வரை நீளம் கொண்ட கப்பல்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை சேர்க்கப்பட்டுள்ளது.
 
மத்திய அரசின் இந்த புதிய விதிமுறைகள் காரணமாக தமிழகத்தில் உள்ள மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் தமிழ்நாட்டில் உள்ள 5 ஆயிரத்து 500 மீன்பிடி விசைப்படகுகளில் 80 சதவீதத்திற்கும் மேலானவை, 15 மீட்டர் ஒட்டுமொத்த நீளத்திற்கும் அதிகமானவை.
 
இப்படகுகள், இந்திய கடல் எல்லைக்கு சற்று தொலைவு வரை மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றுக்கு மத்திய அரசிடம் இருந்து அனுமதி கடிதம் பெறுவதும், இந்திய கடலோரக் காவல்படையிடம் இருந்து ஒவ்வொரு முறையும் அனுமதி பெறுவதும் நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல.
 
1976 ஆம் ஆண்டைய பிரத்யேக பொருளாதார மண்டலம் மற்றும் பிற கடற்பகுதி மீன்பிடி சட்டத்தின்படி, இந்திய குடிமகன் ஒருவர் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் மீன்பிடிக்க மத்திய அரசிடம் இருந்து உரிமம் பெற வேண்டிய அவசியமில்லை. எனவே, மத்திய அரசின் புதிய விதிமுறைகள் இந்த சட்டத்திற்கு எதிராக அமைந்துள்ளன.
 
இந்திய நாடாளுமன்றத்தால் இந்திய குடிமக்களுக்காக சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட உரிமைகளை மத்திய அரசு நிர்வாக உத்தரவின் மூலம் பறிக்க முடியாது. இந்த புதிய விதிமுறைகள் தமிழக மீனவர்களிடையே மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள மீனவ மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
எங்களது மதிப்பிற்குரிய தலைவர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்கேற்ப, இந்திய மீனவர்கள் நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் மீன்பிடிக்கும் உரிமையை தேவையின்றி கட்டுப்படுத்தக் கூடாது என்பதே தமிழக அரசின் நிலை.
 
மீனவர்களுக்கு சொந்தமான 20 மீட்டர் ஒட்டுமொத்த நீளத்திற்கு குறைவான படகுகள் அனைத்தும், அவை மாநில கடல்சார் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அல்லது வேறு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அனைத்து படகுகளுக்கும் இந்திய பிரத்யேக கடல் மண்டலத்தில் மீன்பிடிக்க முழு உரிமை அளிக்கப்பட வேண்டும்.
 
முன்அனுமதி பெற வேண்டும் என மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய முறையானது உள்ளூர் மீனவர்களுக்கு எதிரானது. மேலும், 15 மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட முன் அனுமதி பெற்ற வெளிநாட்டு படகுகள், நமது மீனவர்களுக்கு போட்டியாக மீன்பிடி தொழிலில் ஈடுபட அனுமதி வழங்குவது மிகவும் அபாயகரமானது ஆகும்.
 
தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தலில் சர்வதேச நிபுணத்துவம் பெறச்செய்யும் வகையில், எங்கள் மதிப்புக்குரிய தலைவர் ஜெயலலிதாவின் தீர்க்க தரிசன வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழக அரசு, தமிழக மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்களையும், பயிற்சி முகாம்களையும் ஏற்பாடு செய்துள்ளது.
 
ஆழ்கடல் மீன்வளத்தை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக தமிழக மீனவர்களுக்கு 50 சதவீத உதவித்தொகையாக 30 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. எனவே, முன்அனுமதி பெற்ற வெளிநாட்டு கப்பல்களை அனுமதிப்பது, இந்திய மீனவர்களுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்திவிடும்.
 
இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆந் தேதி மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை வாபஸ்பெற பிரதமர் வலியுறுத்த வேண்டும். புதிய மீன்பிடி சட்டம் இயற்றப்படும் வரை மத்திய அரசு புதிய நெறிமுறைகள் எதையும் வெளியிடக்கூடாது. மேலும், டாக்டர் மீனாகுமாரி குழுவின் பரிந்துரைகளை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும்.
 
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட மீன்பிடி நெறிமுறைகளை ரத்து செய்ய வேண்டும். இந்திய பிரத்யேக கடல் பகுதியில் வெளிநாட்டு மீன்பிடி கப்பல்களை அனுமதிக்கவோ, வெளிநாட்டு மீன்பிடி ஊழியர்களை பணியில் அமர்த்தவோ கூடாது.
 
இந்திய பிரத்யேக கடல் பகுதியில் உள்ள மீன்வளங்களை பாதுகாத்து நமது பாரம்பரிய மீனவர்கள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.