வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 21 நவம்பர் 2014 (16:09 IST)

5 மீனவர்கள் விடுதலை: மோடி, சுஷ்மா சுவராஜுக்கு சென்னையில் பாராட்டு விழா

தமிழக மீ்னவர்கள் 5 பேரையும் தூக்கு தண்டனையிலிருந்து விடுவிக்க முயற்சி எடுத்த பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தும் முயற்சியில் தமிழக பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் பாரதீய ஜனதாவின் செல்வாக்கை வளர்க்க பிரதமர் மோடி, கட்சித்தலைவர் அமித்ஷா ஆகியோர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
 
தமிழ்நாட்டுக்கு தேவையான முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவது மீனவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது மத்திய அரசு திட்டங்களை தமிழ்நாட்டில் விரைவாக செயல்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளர்க்க முடியும் என்று பா.ஜ.க. மேலிடம் கருதுகிறது.
 
இதன் முதல் படியாக நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்த சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மத்திய பா.ஜ.க. அரசு முன் வந்துள்ளது. இதற்காக மத்திய கப்பல்துறை அமைச்சர் கடந்த 4 ஆம் தேதி தமிழ்நாட்டுக்கு வந்து இந்த திட்டத்தை நேரில் ஆய்வு செய்தார்.
 
இதையடுத்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை வழங்கப்பட்டது. அவர் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து, நிறுத்தப்பட்டுள்ள துறைமுகம்–மதுரவாயல் மேம்பால திட்டத்தை விரைவுபடுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
 
இந்த நிலையில், தூக்கு தண்டனை பெற்ற தமிழக மீனவர்கள் 5 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் டெலிபோனில் பேசி பிரதமர் மோடி வற்புறுத்தினார். இதையடுத்து கடந்த 18 ஆம் தேதி மீனவர் பிரதிநிதிகள் டெல்லி சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார்கள்.
 
இதையடுத்து நேற்று முன்தினம் 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். மோடி முயற்சியால் மீனவர்கள் விடுதலை செய்து விடுவிக்கப்பட்டதை தமிழ் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய தமிழக பா.ஜ.க. திட்டமிட்டுள்ளனர்.
 
5 மீனவர்கள் விடுதலை ஆக மோடிதான் காரணம் என்பதால் மீனவர்களும், தமிழக தலைவர்களும், பொது மக்களும் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மோடிக்கு தமிழ்நாட்டில் நலல பெயர் கிடைத்திருக்கிறது. எனவே இந்த பிரச்சனையை தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளர்க்க பயன்படுத்துவது என்று தமிழக பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
 
பிரதமர் மோடிக்கும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் மீனவர்கள் நன்றி தெரிவிப்பது போன்ற போஸ்டர்களை பா.ஜ.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒட்ட ஏற்பாடு நடந்து வருகிறது.
 
இதையடுத்து, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரை தமிழ்நாட்டுக்கு அழைத்து மீனவர் சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடத்த தமிழக பா.ஜ.க. தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கி இருக்கிறார்கள்.
 
இந்த விழா மூலம் தமிழ்நாட்டில் பா.ஜ.க. தீவிரமாக கால் ஊன்ற வழிபிறக்கும். கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும் எனவே இந்த விழாவை நடத்த வேண்டும் என்று கட்சி தலைவர் அமித்ஷாவிடம் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வற்புறுத்தி உள்ளனர். 
 
5 மீனவர்கள் விடுதலையை தொடர்ந்து சிறையில் உள்ள மற்ற மீனவர்களை விடுதலை செய்யவும், படகுகளை மீட்கவும், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவும் முயற்சி நடந்து வருகிறது. இதுவும் நிறைவேறினால் தமிழக பா.ஜ.க. முக்கிய கட்சியாக உருவாகும். பாராட்டு விழா நடைபெறுவதற்கு முன்பு இந்த பிரச்சனைகளுக்கும் தீர்வுகாணப்படும் என்று தமிழக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.