1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : புதன், 2 செப்டம்பர் 2015 (10:57 IST)

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்த 16 மீனவர்களை உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
 
இது குறித்து ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
 
தமிழக மீனவர்களை துன்புறுத்தும் இலங்கை கடற்படையின் நடவடிக்கை மீண்டும் தொடர்கிறது. கடந்த ஆகஸ்டு 29 மற்றும் 31 ஆம் தேதிகளில் நாகப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மற்றும் மண்டபத்தில் இருந்து 3 படகுகளில் சென்று பாரம்பரியப் பகுதியில் அமைதியாக மீன்பிடித்துக்கொண்டிருந்த 16 மீனவர்களை 1 ஆம் தேதியன்று இலங்கை கடற்படையினர் கைது செய்து அங்குள்ள கங்கேசன்துறைக்கு கொண்டு சென்றுவிட்டனர்.
 
பல நூற்றாண்டு காலமாக பாரம்பரியமாக தமிழக மீனவர்களுக்கு பாக் நீரிணை பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தலையிடுகின்றனர். மீனுக்கும் பாரம்பரிய மீனவருக்கும் எல்லை தெரியாது என்பது எல்லாராலும் ஏற்கப்பட்ட கருத்து.
 
சர்வதேச கடல் எல்லை என்பதும், சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில் உள்ளது. 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு தொடர்பான ஒப்பந்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தனிப்பட்ட முறையில் நான் வழக்கு தாக்கல் செய்துள்ளேன். அதில் தமிழக அரசு தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
 
பாக் நீரிணைப் பகுதியில் தொடர்ந்து கைது செய்யப்படும் அச்சுறுத்தலில் தினமும் இருக்கும் ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் பிரச்சினையில் ஒரு நிரந்தர தீர்வைக் காண்பதற்கான செயல்பாட்டை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.
 
தமிழக மீனவர்களின் நலனுக்காக எனது அரசு பல்வேறு திட்டங்களை வகுத்தளித்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடி படகுக்காக ரூ.30 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை சமீபத்தில் தொடங்கி வைத்தேன். தமிழக மீனவர்களை ஆழ்கடல் மீன்பிடிக்கு ஏற்ற வகையில் தயார்படுத்தும் முன்னோடித் திட்டம் அது.
 
171 ஆழ்கடல் மீன்பிடி படகுகளை கட்டுவதற்காக மாநில அரசு ரூ.51.3 கோடி மானியம் ஒதுக்கியுள்ளது. இதனால் 580 மீனவக்குடும்பங்கள் நேரடியாக பயனடைவார்கள். இந்த பிரச்சினையில் ஒரு ஒருங்கிணைந்த தீர்வு காணப்படும் வரை தமிழக மீனவர்களை கைது செய்யவும், அவர்களின் படகுகளை பிடித்துச் செல்லவும் வேண்டாம் என்று இலங்கை கடற்படையினருக்கு அறிவுறுத்தும்படி, இலங்கை அரசிடம் நீங்கள் பேசவேண்டும்.
 
பிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்காமல் இருக்கும் இலங்கை அரசின் தற்போதைய நிலைப்பாட்டினால், பல மீனவர்களின் குடும்பங்கள் தங்களின் ஒரே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்.
 
தமிழகத்தில் இது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலையை உருவாக்கியுள்ளது. எனவே நீங்கள் இந்த விஷயத்தை இலங்கை அரசின் உயர் மட்டத்துக்குக் கொண்டு சென்று, தமிழக மீனவர்கள், அவர்களின் படகுகள், மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றை உடனே விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
 
இந்த ஒரு பிரதான பிரச்சினையை உங்கள் அரசு தீர்த்து வைக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் அதிகமாக இருக்கிறது. எனவே 16 தமிழக மீனவர்களையும், 26 மீன்பிடி படகுகளையும் உடனே விடுவிக்கும்படி, இந்த பிரச்சினையை உடனடியாக இலங்கை அரசிடம் கொண்டு செல்வதற்கு மத்திய வெளியுறவுத் துறைக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.