1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Veeramani
Last Updated : வியாழன், 17 ஏப்ரல் 2014 (16:16 IST)

தோல்வி பயத்தால் ப.சிதம்பரம் தேர்தலில் போட்டியிடவில்லை - மோடி

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிகளின் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் குப்புராமு, எச்.ராஜா ஆகியோரை ஆதரித்து ராமநாதபுரம் டி பிளாக்கில் இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
இந்த தேர்தலில் எந்த அலையும் வீசவில்லை. அலை எங்கே வீசுகிறது என்று கேட்பவர்கள் இந்த ராமநாதபுரம் கூட்டத்தை வந்து பார்க்கட்டும். அவர்களுக்கு அது புரியும். தேர்தல் அறிவிக்கப்பட்டதும் சூறாவளியாக தொடங்கிய கூட்டம் தற்போது சுனாமியாக மாறி இருக்கிறது.
 
இப்போது டெல்லியில் உள்ள அரசு இனிமேல் தன்னை காப்பாற்றி கொள்ள முடியாது. நாட்டை சீரழிப்பவர்கள் இனி தப்பிக்க முடியாது. சகோதரர்களே இந்த தேர்தலில் தமிழ்நாடு புதிய சரித்திரம் படைக்க உள்ளது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக மாற்று சக்தி இல்லை.
 
அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சி புரிந்துள்ளன. அவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி அரசியல் செய்துள்ளனர். தற்போது முதல் முறையாக தமிழகத்தில் நம்பகத்தன்மையுடன் ஒரு மாற்று உருவாகி உள்ளது. அந்த மாற்றாக தேசிய ஜனநாயக கூட்டணி திகழ்ந்து வருகிறது. சமுதாயத்தை காக்க சக்தி வாய்ந்த கட்சிகள் இந்த கூட்டணியில் உள்ளன.
 
பல ஆண்டுகளாக தமிழர்களின் நலனை காப்போம். அவர்களை பாதுகாப்போம் என்று கூறி வந்தவர்களால் அதனை செய்ய முடியவில்லை. இப்போது முதல் முறையாக நம்பகத்தன்மை உடைய தேசிய ஜனநாயக கூட்டணி உருவாகி இருக்கிறது.

நண்பர்களே நாம் சோமநாதபுரம் ஈஸ்வர் மண்ணில் இருந்து ராமநாதபுரம் ஈஸ்வர் மண்ணிற்கு வந்துள்ளேன். இது புண்ணிய பூமி. இந்த நாட்டின் உயர்ந்த மனிதரான அப்துல்கலாம் பிறந்த இடம். அவர் ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல. தொலைநோக்கு பார்வை கொண்டவர். அவர் நாட்டிற்கு ஆற்றிய பங்கை விலையிட முடியாது. உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அவர் முதலில் பணியாற்றிய இடம். அகமதாபாத் தான்.
 
சிறுபான்மையினருக்கு பாதுகாவலர் எனும் காங்கிரஸ் அவர்களுக்காக திட்டங்களை வெளியிட்டுள்ளது. ஆண்டுகள் பல கடந்துவிட்டன. கோடிக்கணக்கான ரூபாய் அந்த திட்டத்திற்கு செலவு செய்யப்பட்டு விட்டது. ஆனால் சிறுபான்மையினருக்கு என்ன பலன் கிடைத்துள்ளது. இப்போது அறிவித்துள்ள 15 அம்ச திட்டம் கூட காகித வாக்குறுதி மட்டுமே. அது எந்த மாற்றத்தையும் கொண்டுவர போவதில்லை. முஸ்லிம் மக்களின் கண்களில் மண்ணை தூவுவதற்காக அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் எந்தவித பலன்களையும் கொடுக்கப் போவதில்லை.
 
தமிழகத்தில் ஒரு காங்கிரஸ் தலைவர் இருக்கிறார். மறு வாக்குப்பதிவு அமைச்சரான (ப.சிதம்பரம்) அவர் தோல்வி பயத்தால் தேர்தலில் நிற்கவில்லை. அவர் இப்போது வீட்டுக்கு வீடு தங்களது கட்சியின் சின்னமான 'கை' கடிகாரம் கொடுத்து வருகிறார். இதனை தேர்தல் கமிஷன் தீவிரமாக விசாரணை நடத்த வேண்டும்.
 
இவரது கொள்கையாலும் டெல்லியில் உள்ள அரசாலும் பட்டாசு தொழில் நசிந்து வருகிறது. குறைந்த விலையிலான சீன பட்டாசுகள் வருகையினால் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகள் சாகக்குடிய சூழல் உள்ளது. நான் உங்களுக்கு ஒரு உறுதி அளிக்கிறேன். டெல்லியில் பாரதீய ஜனதா அரசு அமைந்தவுடன் பட்டாசு தொழிலை காக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.
 
இங்கு நம்முடைய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தினமும் துன்புறுத்தி வருகின்றனர். குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் துன்புறுத்தி வருகின்றனர். இதற்கு காரணம் டெல்லியில் உள்ள அரசின் பலவீனம்தான். அந்த டெல்லி அரசு வலிமை மிக்கதாக, துணிவுமிக்கதாக இருந்தால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள்.
 
தற்போதுள்ள விஞ்ஞான வளர்ச்சியை நாம் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். குஜராத்தில் உள்ள மீனவர்களுக்கு நவீன தகவல் தொழில்நுட்பம் மூலம் கடலில் எந்த இடத்தில் மீன்கள் அதிகமாக உள்ளது என்பது தினமும் தெரிவிக்கப்படுகிறது.
 
இதன் மூலம் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று 2 மணி நேரத்தில் ஏராளமான மீன்களை பிடித்து திரும்புகின்றனர். இந்த தொழில் நுட்பத்தை பாரத நாட்டின் அனைத்து மீனவர்களுக்கும் நாங்கள் பயன்படுத்துவோம். விஞ்ஞானம் வளர்ந்திருக்கும் நேரத்தில் மொபைல் போன் மூலம் தகவல் கொடுத்து மீனவர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.
 
மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தால் தமிழக மீனவர்களை காப்பாற்ற உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போதைய மத்திய அரசு மீனவர்களை காக்க தவறிவிட்டது. தமிழ்நாட்டில் குடிநீர் பிரச்சனை, மின்தடை பிரச்சனை பெரிதாக உள்ளது. மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்ததும் நதிகளை இணைத்து தமிழ் நாட்டில் குடிநீர் பிரச்சனை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
ராமேசுவரத்தை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காங்கிரசார் ஏழ்மையை காட்சி பொருட்களாக பார்க்கிறார்கள். ஆனால் நான் ஏழையாக பிறந்து ஏழையாக வாழ்ந்தவன். இதனால் ஏழ்மையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பேன்.
 
சகோதர, சகோதரிகளே இந்த தொகுதியில் போட்டியிடும் குப்புராம், பக்கத்து தொகுதியான சிவகங்கையில் போட்டியிடும் எச்.ராஜா மற்றும் நமது கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய தாமரை சின்னம் மற்றும் கூட்டணி கட்சி சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
 
இவ்வாறு அவர் பேசினார்.