1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 28 ஜூலை 2016 (15:19 IST)

செல்போனில் உங்களை இப்படி சிலர் ஏமாற்றலாம் : காவல்துறை எச்சரிக்கை

செல்போனில் தொடர்பு கொண்டும் பேசும் சிலர், நூதன முறையில் மோசடி செய்து வருகிறர்கள். அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.


 

 
இதுதொடர்பாக ஈரோடு குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் சேரலாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
அண்மைக் காலங்களில் அறிமுகமில்லாத நபர்கள் ஏதோ வங்கியில் இருந்து ஏடிஎம் மேலாளர் பேசுவதுபோல் உங்கள் செல்லிடப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்களது ஏடிஎம் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என்றும், புது அட்டை அனுப்புவதாக சொல்லியும் உங்களது ஏடிஎம் அட்டை எண், ரகசிய எண் மற்றும் ஏடிஎம் அட்டையின் பின்புறம் உள்ள சிவிவி எண் ஆகியவற்றை கேட்டு உங்களுக்கு தெரியாமலே உங்களது பணத்தை எடுத்து மோசடி செய்து வருகின்றனர்.
 
எந்த ஒரு சமயத்திலும் எந்த வங்கியில் இருந்தும் இவ்வாறான விவரங்களை கேட்பதில்லை. சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கி அல்லது காவல் நிலையங்களைத் தொடர்பு கொண்டு விவரம் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் செல்லிடப்பேசி எண்ணுக்கு கார் அல்லது லட்சக்கணக்கில் பரிசு விழுந்திருப்பதாக தெரிவித்தோ உங்களது பெயர், வயது, மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்ட விவரங்களை கேட்டு வரும் குறுஞ்செய்திகளை  உண்மையென நம்பி எந்த விவரங்களையும் தெரிவிக்கக் கூடாது.
 
மேற்படி கார் அல்லது பரிசுத் தொகை அனுப்ப டெபாசிட் பணம் கட்ட வேண்டும் எனச் சொல்லி பணத்தை கட்ட வைத்து ஏமாற்றி வருகின்றனர். அதேபோல், வெளிநாட்டு வங்கி (பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்த்) மற்றும் கோக கோலா போன்ற நிறுவனங்கள் உங்களுக்குப் பணம் அனுப்ப இருப்பதாகவும் அதற்கு ரிசர்வ் பேங்க் ஒப்புதல் பெற வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் மின்னஞ்சல் அனுப்புவது போல் பொய் தகவல்களை அனுப்பி அதற்கு டெபாசிட் கட்ட வேண்டும் எனச் சொல்லி நம்ப வைத்து மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய மோசடிகளை நம்ப வேண்டாம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.