வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (11:29 IST)

திமுக அரசை கண்டித்து, அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்: தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

திமுக அரசை கண்டித்து, அதிமுக மகளிர் அணி சார்பில் சென்னையில் வரும் 24 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் என எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்து கழக மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பாக சென்னை மாநகரில் 24.9.2024 - செவ்வாய் கிழமை அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தான் ஆட்சி செய்யும் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அமெரிக்காவில் மோட்டார் பொருத்திய சைக்கிளை மிதிப்பது போல் நடிக்கும் பொம்மை முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினின் நடவடிக்கை விடியா திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது.

கடந்த 40 மாதங்களாக தமிழகத்தில் நாள்தோறும் சமூக விரோதச் செயல்களும், குற்றச் செயல்களும் அரங்கேறி வருகின்றன. திமுக ஆட்சியில் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், பாலியல் வன்கொடுமையாளர்களும் சுதந்திரமாக, சர்வ சாதாரணமாக குற்றம் புரிவது வாடிக்கையாக இருக்கிறது.

 6 வயது சிறுமி முதல் 60 வயதைக் கடந்த பெண்கள் வரை, யாருக்குமே பாதுகாப்பில்லாத சூழ்நிலை விடியா திமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை, குறிப்பாக பாலியல் குற்றச் செயல்கள் பற்றி, நான் பலமுறை சட்டமன்றத்திலும், அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் விடியா திமுக அரசின் கவனத்தை ஈர்த்தும், அதைத் தடுக்க திமுக அரசால் முடியவில்லை.

காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், சட்டப்படி உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தமிழக காவல் துறைக்கு முழு சுதந்திரத்தை இன்றுவரை வழங்கவில்லை. மேலும், திமுக அரசின் முதல்-அமைச்சருடைய செயலற்றத் தன்மையால் ஒருசில காவல் துறையினர் மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக, சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருப்பதாக வரும் செய்திகள் வெட்கக் கேடானதாகும்.

கடந்த 40 மாதகால திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்து வரும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் தவறிய சமூக விரோதச் செயல்களை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக மகளிர் அணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில், 24.9.2024 (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணியளவில், சென்னை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும்,முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி அவர்கள் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.கோகுல இந்திரா முன்னிலையிலும் நடைபெறும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran