வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2016 (22:02 IST)

நுழைவுத் தேர்வு எந்த வடிவத்தில் வந்தாலும் அதை திமுக எதிர்க்கும்: கருணாநிதி

நுழைவுத்தேர்வு எந்த வகையில் கொண்டு வந்தாலும் அதை எதிர்ப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.


 

 
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
 
இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் பாடப் பிரிவுகளுக்கு தனியார் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளிலும், தேசிய அளவில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்துக்கு மத்திய சுகாதாரத் துறை ஒப்புதல் அளித்துள்ளதாக இன்று ஏடுகளில் ஒரு செய்தி வந்துள்ளது. 
 
இந்திய மருத்துவக் கவுன்சில், மருத்துவக் கல்வியைக் கட்டுப்படுத்தும் அமைப்பாகச் செயல்படுகிறது.
 
மருத்துவக் கல்லூரிகளின் அனுமதிக்கு தேசிய அளவில் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை இந்திய மருத்துவக் கவுன்சில் முன் வைத்துள்ளது.
 
இந்தத் திட்டத்துக்கு மத்திய சுகாதாரத் துறை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனாலும் பிற அமைச்சகங்களின் ஆலோசனைகளுக்குப் பின் இதிலே இறுதி முடிவு எடுக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
 
எனவே இந்த நேரத்தில் தமிழக அரசு முன்னெச்சரிக்கையாகவும், விரைவாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமாகும்.
 
எம்பிபிஎஸ், பிடிஎஸ், மற்றும் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ), வெளியிட்ட அறிவிப்பினை உச்ச நீதிமன்றமே 18–7–2013 அன்று ரத்து செய்து தீர்ப்பளித் திருக்கிறது.
 
பொது நுழைவுத் தேர்வு தொடர்பான இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பு, அரசியல் சாசனச் சட்டத்தை மீறுவதாக உள்ளது என்று தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியிருக்கிறது.
 
எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அறிவிப்பை எதிர்த்து மொத்தம் 115 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றின் மீது வழக்கு நடைபெற்று, உச்ச நீதிமன்றம் பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது.
 
தமிழகத்தைப் பொறுத்த மட்டில், நடைமுறையில் இருந்த பொது நுழைவுத் தேர்வினை ரத்து செய்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டம் இயற்றப்பட்டு 2007–08ஆம் கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் பிளஸ் 2 படிப்பில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி மருத்துவப் படிப்பிற்கு மாணவர்களைச் சேர்க்கும் நடைமுறைதான் இருந்து வருகிறது. 
 
இது தொடரப்பட வேண்டும் என்று நான் முதல்வராக இருந்தபோது, இந்தியப் பிரதமருக்கும், மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கும் 15.8.2010ல் கடிதம் எழுதினேன். 11.01.2011 முதல் 13.01.2011 வரை ஐதராபாத்தில் மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலைமையில் நடந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்களின் மாநாட்டில் மருத்துவப் படிப்பிற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு கொண்டு வரப்படமாட்டாது என முடிவெடுக்கப்பட்டது.
 
15.8.2010 அன்று இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கும், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கும் நான் எழுதிய கடிதத்தில், கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு, குடியரசுத்தலைவரின் ஒப்புதலோடு,பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வினை, 2007–2008ஆம் ஆண்டு முதல் ரத்து செய்து சட்டம் இயற்றியுள்ளது என்றும்;
 
அதன் காரணமாக சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர்.
 
அகில இந்திய பொது நுழைவுத் தேர்வுமுறை; மாநிலங்கள் கல்வித் துறையை நிர்வாகம் செய்வதில் உள்ள உரிமையில் குறுக்கிடுவதாகக் கருதப்படுகிறது என்றும்; தமிழக அரசு நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தி வரும் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும்;
 
சமூக நீதியின் தாயகமான தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலன்கள் பாதிப்புக்குள்ளாகும் என்றும் கருத்து தெரிவித்திருந்தேன்,
 
ஏழை எளிய நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த வசதிகளற்ற கிராமப்புற மாணவர்களுக்கும், வசதிகள் மிகுந்திருக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை அகற்றுவதற்காகவே நுழைவுத் தேர்வு முறையையே ரத்து செய்தது கழக ஆட்சி.
 
எனவே நுழைவுத் தேர்வு கூடாது என்ற கொள்கை அடிப்படையிலும்; அகில இந்திய நுழைவுத் தேர்வு மாநில உரிமைகளில் தலையிடும் காரியம் என்பதாலும், திமுக வைப் பொறுத்தவரை, நுழைவுத் தேர்வு எந்த வடிவத்தில் வந்தாலும்; அதை எதிர்க்கும் என்பதை மீண்டும் தெளிவுபடுத்திட விரும்புகிறேன். இவ்வாறு அதில் கருணாநிதி கூறியுள்ளார்.