வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2016 (20:32 IST)

பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து பதிலடி - 330 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், ஜோ ரூட்டின் இரட்டை சதத்தின் உதவியால் இங்கிலாந்து அணி 330 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
 

 
புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை 75 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. இங்கிலாந்து அணி தனது சொந்த மண்ணில் தோல்வி அடைந்ததை அடுத்து பெரிதும் விமர்சிக்கப்பட்டது.
 
இதனால் பலத்த எதிர்பார்ப்புக்கு இடையில், மான்செஸ்டர் நகரில் 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 589 ரன்கள் குவித்தது.
 
தனது அற்புதமான இன்னிங்ஸை விளையாடிய ஜோ ரூட் 254 ரன்கள் [27 பவுண்டரிகள்] குவித்து அசத்தினார். அதேபோல் இங்கிலாந்து அணியின் கேப்டன் அலைஸ்டர் குக் 105 ரன்கள் [15 பவுண்டரிகள்] எடுத்து அணியின் எண்ணிக்கை உயர் உதவினார். மேலும், பைர்ஸ்டோ மற்றும் வோக்ஸ் தங்கள் பங்கிற்கு அரைச்சதம் விளாசினர்.
 
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகப்பட்சமாக கேப்டன் மிஸ்பா உல் ஹக் 52 ரன்களை எடுத்தார். மற்ற எவரும் அரைச்சதத்தை எட்டவில்லை.
 
இதனையடுத்து 391 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.
 
இதனையடுத்து, பாகிஸ்தான் அணிக்கு 565 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், மோசமாக ஆடிய 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 330 ரன்கள் வித்தியாசத்தில் அபார தோல்வி அடைந்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற நிலையில் சமன் செய்துள்ளது.