1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 29 ஜூன் 2016 (12:02 IST)

வசூல் வேட்டை நடத்திய குஷ்பு?: தட்டிக்கேட்காத இளங்கோவன்

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது ராஜினாமா குறித்து சத்திய மூர்த்தி பவனில் தொண்டர்களும், தலைவர்களும் பரபரப்பாக பேசி வருகின்றனர்.


 
 
இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்தாலும், அந்த ராஜினாமா கடிதம் தேசிய தலைமையின் நெருக்கடியால் தான் பெறப்பட்டது என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
இந்நிலையில் இளங்கோவன் பதவி பறிப்புக்கு பல்வேறு காரணங்கள் பேசப்பட்டு வருகிறது. அதில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு பற்றிய செய்தி தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 
தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியினர் போட்டியிட்ட சட்டசபை தொகுதிகளில் பிரச்சாரம் செய்த குஷ்பு, ஒவ்வொரு வேட்பாளரிடமும் தான் பிரச்சாரத்திற்கு வருவதற்காக தனது உதவியாளர்கள் மூலம் ஒரு லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.
 
இதில், திருநாவுக்கரசர் பணம் கொடுக்காததால் அவர் போட்டியிட்ட அறந்தாங்கி தொகுதிக்கு குஷ்பு பிரச்சாரத்திற்கு செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
குஷ்பு தரப்பினரின் இந்த வசூல் வேட்டை பற்றி இளங்கோவன் எந்த விசாரணையும் செய்யாததால் அவருக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என டெல்லி தலைமைக்கு புகார் சென்றதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
இந்நிலையில் பதவியை ராஜினாமா செய்த இளங்கோவனுக்கு ஆதரவாக குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.