1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 5 அக்டோபர் 2015 (21:30 IST)

ஈழத்தமிழர் விவகாரம்; சர்வதேச விசாரணை நடத்த இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்: கருணாநிதி வலியுறுத்தல்

ஈழத்தமிழர் விவகாரத்தில், சர்வதேச விசாரணை நடத்த இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
 
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-


 

 
 
ஈழத் தமிழர்கள் அனுபவித்த எண்ணற்ற கொடுமைகளுக்கு முதல் நிலை நீதியாவது கிடைத்திடும்; இந்தியா இதுவரை மேற்கொண்டு வரும் நிலைப்பாட்டினைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்; என்பதை மத்திய அரசு உணர்ந்து, உடனடியாக அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
 
இப்போதாவது இந்திய அரசே சர்வ தேச விசாரணைக்குத் தீர்மானம் கொண்டு வர வேண்டும். சர்வ தேசச் சட்ட விதிமுறைகளைக் காலில் போட்டு மிதித்து, இலங்கையில் பழி வாங்கும் நோக்கில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கடுமையான போர்க் குற்றங்கள் மற்றும் அருவருக்கத்தக்க வகையில் அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி, ஐ.நா. மனித உரிமை ஆணையம் நேரடியாகவே விசாரணை நடத்தி, அங்கே மனித உரிமை மீறல்களும், போர்க் குற்றங்களும் எது குறித்தும் கவலையின்றிப் பலவகைகளிலும் நடந்தது உண்மை தான் என்று உறுதி செய்துள்ளது.
 
இதனையடுத்து, ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 30வது கூட்டத்தில், மனித உரிமை ஆணையர் விரிவான அறிக்கை ஒன்றினைத் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து, சர்வ தேச நாடுகளின் நீதிபதிகளைக் கொண்ட சர்வ தேசக் கலப்பு நீதி மன்றம் அமைத்து விசாரணை நடைபெற வேண்டுமென்று தெரிவித்திருந்தார்.
 
ஆனால், தொடக்கத்தில் இலங்கை அரசு உள்நாட்டு விசாரணை மட்டும் தான் நடத்துவோம்; இதிலே சர்வ தேச நீதிபதிகள் மற்றும் சட்ட வல்லுனர்களின் யோசனைகளை வேண்டுமானால் ஏற்றுக் கொள்வோம் என்றும் தெரிவித்தது.
 
உள்நாட்டு விசாரணை நடத்தினால், அது விருப்பு வெறுப்பற்ற விசாரணையாக இருக்காது என்பதாலும்; குற்றம் சாட்டப்பட்டவரே குற்ற விசாரணையை நடத்துவது இயற்கை நீதியையே குறைத்து மதிப்பிடுவதாக ஆகி விடும் என்பதாலும்; புண்ணுக்குப் புனுகு தடவும் கதையாகப் போய் விடும் என்பதாலும் தான்; உலகத் தமிழ் அமைப்புகள் அனைத்தும் சர்வ தேச விசாரணையே வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
 
இந்திய அரசும் பெரும் பாதிப்புக்காளான தமிழர்களுக்கு நீதி கிடைத்திட வேண்டுமென்ற உள்ளார்ந்த எண்ணத்தோடு, சுதந்திரமான, நம்பகத் தன்மையுள்ள சர்வ தேச விசாரணை வேண்டும் என்பதற்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டுமென்றும், இந்தியாவே அதற்காகத் தக்கதொரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் முன் மொழிய வேண்டுமென்றும் தொடர்ந்து நாம் தெரிவித்து வந்தோம்.
 
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா முதலாவது வரைவுத் தீர்மானத்தைத் தாக்கல் செய்த போது, இலங்கை அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தது. அதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அமெரிக்க அதிகாரிகள் கொண்ட குழுவுடன் இலங்கைக் குழுவினர் பேச்சுவார்த்தையும் நடத்தி அவர்களுடைய மனதை மாற்றினர். இதனைத் தொடர்ந்து தற்போது, இறுதியாகத் திருத்தப்பட்ட வரைவுத் தீர்மானம் ஒன்றினை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா தாக்கல் செய்தது.
 
அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகள் அனைத்தும் சேர்ந்து 1-10-2015 அன்று கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தில், "காமன்வெல்த் உள்ளிட்ட வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கு நடத்தும் அங்கீகரிக்கப்பட்ட வல்லுனர்கள் மற்றும் புலன் விசாரணை நிபுணர்கள் ஆகியோர் பங்குபெறும், நம்பகத் தன்மை உள்ள நீதி விசாரணை அமைப்பு ஒன்றை இலங்கை அரசு உருவாக்கி, மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும்"என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட போது, அந்தத் தீர்மானத்தை மற்ற நாடுகளுடன் இணைந்து, கொண்டு வந்து இலங்கை அரசும் ஆதரித்தது.
 
ஆனால் அங்கே தீர்மானத்தின் அடிப்படைக் காரணமாக இருந்து விட்டு, தீர்மானம் நிறைவேறிய பிறகு, அந்தத் தீர்மானத்திற்கு எதிராக இலங்கை அதிபர், விசாரணைக்கு வெளி நாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என்று பேட்டியளித்திருப்பதில் இருந்தே, இலங்கை எவ்வாறெல்லாம் முன்னுக்குப் பின் முரணாகவும், அனைத்து நாடுகளின் தீர்மானத்தையே புறக்கணித்திடும் அலட்சியத்தோடும் நடந்து கொள்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
 
ஏன், தீர்மானத்தைக் கொண்டு வந்த அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும், அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்த இந்தியாவும் இலங்கையின் சர்வ தேச ஒத்துழைப்புக்கு விரோதமான நிலையினைத் தற்போதாவது புரிந்து கொள்ள வேண்டும்.
 
இலங்கைச் சிங்களப் பேரினவாதத்தின் குணாதிசயங்களை நாம் உண்மையாகப் புரிந்து கொண்டிருக்கும் காரணத்தால் தான், நான் 27-9-2015 அன்று விடுத்த அறிக்கையிலேயே "இந்தியா, அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்திட முயற்சிப்பது, இலங்கையில் நடந்த இனப் படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றுக்கு உரிய நீதி வழங்க மறுப்பதாக அமைந்து விடுவதோடு; உலகத் தமிழர்களின் உள்ளத்தில் ஆறாத வடுவாகவும் ஆகி விடும் என்பதை உணர்ந்து, இந்திய அரசு, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சர்வ தேச விசாரணை வேண்டும் என்பதிலிருந்து சிறிதும் பின் வாங்கக் கூடாது"" என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.
 
ஆனால், இலங்கை அரசின் சார்பில் அதன் அதிபர், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொண்டு வந்து ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்து, அனைத்து நாடுகளின் முகத்திலும் கரி பூசியிருப்பதைப் புரிந்து கொண்டு, இப்போதாவது இந்தியா ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிடம், இலங்கை அதிபரின் மாறுபட்ட அறிவிப்பு எப்படி மனித உரிமைகள் ஆணையத்திற்கே முரணானது, சர்வ தேச உறவின் நெறிமுறைகளைப் பெரிதும் பாதிக்கக் கூடியது என்பதை விளக்கி, அந்த நாடுகளின் ஆதரவைப் பெற்றுச் சர்வ தேச விசாரணையை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
 
மேலும், விசாரணை அமைப்பை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமே உருவாக்கி, விசாரணை ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடிவுறுவதற்கு ஏதுவாகக் கண்காணித்திட வேண்டும் என்றும், தனித் தீர்மானம் ஒன்றினை முன் மொழிந்து நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது தான் பொருத்தமாக இருக்கும், அதன் மூலம் உலகத் தமிழர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பினை ஓரளவுக்கேனும் நிறைவு செய்திட முடியும்  என தெரிவித்துள்ளார்.