வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2017 (09:43 IST)

ஜெயலலிதாவின் 110 விதி அறிவிப்பு: பதில் சொல்ல கடமைப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி!

ஜெயலலிதாவின் 110 விதி அறிவிப்பு: பதில் சொல்ல கடமைப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் 110-வது விதியின் கீழ் பல அறிவிப்புகளை வெளியிட்டார். இது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் தற்போது இறந்துவிட்டதால் அவர் 110-வது விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகள் என்னவாயிற்று என தமிழக சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.


 
 
ஜெயலலிதா அறிவித்த 110-வது விதியின் கீழ் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே சட்டசபையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
 
அப்போது பதில் அளித்த முதல்வர் பழனிச்சாமி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 110-வது விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள் என்ன ஆனது என்பதற்கான பதிலை தெரிவிப்பதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். 2011-12 முதல் 2015-16 முடிய ஐந்து ஆண்டுகளில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட 879 அறிவிப்புகளில், 872 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
 
மீதமுள்ள 7 அறிவிப்புகளுக்கான ஆயத்தப் பணிகள் முடிவடைந்த பின்னர் அரசாணை வெளியிடப்படும். 557 அறிவிப்புகளுக்கான திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், 315 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகளில் பெரும்பாலானவை முடிவுறும் தருவாயில் உள்ளன.
 
இதில் 7 அறிவிப்புகளுக்கான திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட காரணத்தினாலும், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாலும் நிலுவையில் இருக்கின்றன. 2016-17ஆம் ஆண்டு 110-வது விதியின் கீழ் 175 அறிவிப்புகளை வெளியிட்டார்.
 
167 அரசாணைகள் வெளியிடப்பட்டபோது, அந்தப் பணிகள் அனைத்தும் தொடங்கப்பட்டு, அதில் 20 பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும், 147 பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 8 அறிவிப்புகளுக்கான திட்டப் பணிகள் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 3 அறிவிப்பிற்கான திட்டங்கள் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளன என்று கூறினார்.