1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 11 மே 2020 (22:31 IST)

#Breaking: சென்னைக்கு மே 31 ஆம் தேதி வரை ரயில் சேவை கிடையாது??

சென்னைக்கு ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசிடம் கோரிக்கை. 
 
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக விமானம், ரயில் மற்றும் பேருந்து போன்ற பொது போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மே 12 ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவையைத் துவங்க உள்ளதாக இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.
 
சிறப்பு சேவையாக இயக்கப்படும் இந்த ரயில்கள், டெல்லியில் இருந்து ஹெளரா, பாட்னா, புவனேஷ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மும்பை சென்டிரல், அகமதாபாத் உள்ளிட்ட நாட்டின் பதினைந்து நகரங்களுக்கு இயக்கப்பட உள்ளது. 
 
முதல் கட்டமாக ஒவ்வொரு வழி தடத்திற்கும் இரண்டு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதில் டெல்லியில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில் மே 13 ஆம் முதல் இயக்கப்பட உள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை இந்த ரயில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், சென்னைக்கு ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என மத்திய அரசிடம் கோரியுள்ளார். 
 
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பதால் சென்னைக்கு மே 31 வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம் என கூறியுள்ள அவர் கொரோனா தடுப்பு பணிகளுக்காக உடனடியாக ரூ.2,000 கோடி நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.