”குற்றவாளிகளுக்கு துணைபோகும் திமுக அரசு!” – எடப்பாடியார் ஆவேசம்!
ஆட்சிக்கு வந்தது முதல் மக்கள் நல பணிகளில் கவனம் செலுத்தாமல் அதிமுகவை அழித்த திமுக திட்டம் தீட்டுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக ஆண்டு பட்ஜெட் மீதான கூட்டத்தொடர் தமிழக சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெற இருப்பதால் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே கூட்டத்தொடரை முடித்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான விவகாரம் மீண்டும் விசாரிக்கப்படும் என தெரிவித்தார். இதை எதிர்த்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு எழுந்தது.
இந்நிலையில் அதிமுகவுடன் மற்ற எதிர்கட்சிகளான பாமக, பாஜகவும் சட்டப்பேரவையில் வெளியேறியுள்ளனர்.
தர்ணாவில் ஈடுபட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “கொடநாடு வழக்கு முடிந்துவிட்ட ஒன்று. அதன் மீதான மறு விசாரணைக்கு நீதிமன்றத்தில் உரிய அனுமதி வாங்கியதாக தெரியவில்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இதுபோன்ற பொய் வழக்குகளை தொடர்வதன் மூலம் திமுக மக்களை திசை திருப்ப முயல்கிறது. இந்த வழக்கில் என்னை இணைத்து விட திட்டமிடுவதாக தெரிகிறது. ஆரம்பம் முதலே கொடநாடு குற்றவாளிகளுக்கு திமுக வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர். மக்களை குற்றவாளிகளிடமிருந்து காக்க வேண்டிய அரசு, குற்றவாளிகளுக்கு துணை போகும் அரசாக உள்ளது” என்று பேசியுள்ளார்.