வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By k.n.vadivel
Last Modified: சனி, 2 மே 2015 (13:13 IST)

தமிழகம் முழுவதும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் வட்டாச்சியர் அலுவலகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலம் வரை எங்கும் ஊழல் தலைவிரித்து ஆடுவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
 
திருவண்ணாமலை மாவட்டம், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மே தின எழுச்சி நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், 
 
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தடையில்லா மின்சாரம் கிடைக்கும், ரேசன் கடையில் பெண்களுக்கு வேண்டிய எல்லா பொருட்களும் தடையில்லாமல் கிடைக்கும் என்று சொன்னார்கள். அதை நம்பி பொது மக்களும் வாக்களித்தார்கள். அதனால், அதிமுக ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் கூறிய ஏதுவும் நடக்கவில்லை. இது குறித்து கேள்வி கேட்டல் யாரும் பதில் கூறுவதில்லை.  
 
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த போது,  ஊர் ஊர்க்கு அன்றைய முதல்வர் காமராஜர் பள்ளிக் கூடங்களை திறந்தார். ஆனால், அதிமுக ஆட்சியில் ஊர், ஊருக்கு, தெருவுக்கு தெருவுக்கு டாஸ்மாக் கடை திறக்கின்றனர். இது நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுமா ? என பொது மக்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும். 
 
தமிழக அமைச்சர்கள் பலரும், சட்ட மன்ற உறுப்பினர்கள் பலரும் கோவில் கோவிலாக சென்று பாலாபிஷேகம், மண் சோறு, அங்க பிரதட்சணம் செய்கிறார்கள். பசுமாடுகளை வைத்து கோ பூஜை செய்கின்றனர். இது உலகமாக நடிப்பாக உள்ளது என்று பொது மக்களே பேசுகின்ற நிலை வந்துவிட்டது. 
 
தமிழகத்தில் வட்டாச்சியர் அலுவலகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை எங்கும் ஊழல் தலை விரித்து ஆடுகிறது. தமிழக்தில் ஊழல் இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்றால், பொது மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்றார்.
 
இந்த கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு மற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகிய இருவருக்கும் கிரீடம் அணிவித்து, வீரவாளை தொண்டர்கள் பரிசளித்தனர்.