கிளாம்பாக்கத்தில் போதை பொருள் கடத்தல்: திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
ரூ.70 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி சையது இப்ராஹிம் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இராமநாதபுரம் மாவட்ட சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு துணைத் தலைவர் கா.செய்யது இப்ராஹிம், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முன்னதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்த போது தான் போதைப்பொருள் குறித்த தகவல் தெரிய வந்ததாகவும், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் செங்குன்றம் பகுதியை சேர்ந்த மன்சூர், இப்ராஹிம் ஆகிய இருவரையும் கைது செய்திருப்பதாகவும் கூறப்பட்டது
மேலும் கிளாம்பாக்கத்தில் பிடிபட்ட நபர்களிடம் நடந்த விசாரணையின் அடிப்படையில் செங்குன்றத்தில் சோதனை செய்தபோது 70 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran