1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (14:50 IST)

503 மாணவர்களின் உயர்கல்வி இட ஒதுக்கீடு பாதிப்பு: விசாரணை செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்..!

503 மாணவர்களின் உயர்கல்வி இட ஒதுக்கீடு  பாதிப்பு அடைந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
தில்லி, கோபால் மற்றும் குவாலியர் நகரங்களில்  கடந்த 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் பள்ளி மாணவ, மாணவியருக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு மாணவர் கூட கலந்து கொள்ளவில்லை. இதற்கு முழுக்க முழுக்க காரணம் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்களின் அலட்சியம் தான். இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறமிருக்க, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு கலந்து கொள்ளவில்லை என்பது தமிழ்நாட்டிற்கு மரியாதைக் குறைவு ஆகும். பள்ளி மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்  விளையாட்டுப் போட்டிகளில்  பங்கேற்பதில் அதிகாரிகள் காட்டிய அலட்சியம் கண்டிக்கத்தக்கது ஆகும்.
 
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 254 மாணவர்கள், 249 மாணவிகள் என 503 பேரை அனுப்பி வைக்கக் கோரும் கடிதங்கள் கடந்த மே 11-ஆம் தேதி முதலே தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரி நாகரத்தினத்திற்கு அந்தக் கடிதங்கள் சென்றதாகவும், அவற்றை அவர் பள்ளிக்கல்வித்துறை அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அழைப்புக் கடிததங்களைப் பார்த்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ளத் தவறியதால் தான்  தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்களால் பங்கேற்க முடியவில்லை.
 
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில்  விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பொறியியல் பிரிவில் 500 இடங்கள், மருத்துவப் படிப்பில் 7 இடங்கள், பல் மருத்துவப் படிப்பில் ஓரிடம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் மாணவர்கள்  வெல்லும் பதக்கங்கங்களுக்கேற்ப மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தங்கப்பதக்கம் வென்றால் 190 மதிப்பெண், வெள்ளிப்பதக்கம் வென்றால் 160 மதிப்பெண், வெண்கலப்பதக்கம் வென்றால் 130 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டாலே 50 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இந்தப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் கலந்து கொள்ளாததால் இந்த மதிப்பெண்களைப் பெறும் வாய்ப்பை இழந்து விட்டனர்.
 
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு கலந்து கொள்ளாதது தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலங்களில் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு  கலந்து கொள்ளாதது இதுவே முதல்முறையாகும். இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை  நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். இந்த சிக்கலில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது தமிழக  அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
 
Edited by Mahendran